கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில், இப்போர் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, அணு ஆயுத பயன்பாடு குறித்து புதின் பேசியது உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை கிளப்பி இருந்தது. 


"ஆக்ரோஷமான ரஷிய-விரோதக் கொள்கையில், மேற்குலக நாடுகள் அனைத்து எல்லையையும் மீறிவிட்டன. இது ஒரு முட்டாள்தனம் அல்ல. அணு ஆயுதங்களை வைத்து நம்மை அச்சுறுத்த முயல்பவர்கள், அந்த ஆயுதங்கள் அவர்களை நோக்கி திரும்பிச் செல்லக்கூடும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்" என அணு ஆயுதம் குறித்து புதின் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


இச்சூழலில், வியாழக்கிழமை அன்று தான் தெரிவித்த முந்தைய கருத்துக்கு நேர் எதிராக புதின் பேசியுள்ளார். உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் எண்ணம் இல்லை எனக் கூறிய அவர், உலகத்தில் ஆதிக்கத்தை செலுத்த மேற்குலக நாடுகள் முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.


 






சர்வதேச வெளியுறவு கொள்கை நிபுணர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் பேசிய புதின், "உக்ரைனை அணு ஆயுதங்களை கொண்டு ரஷியா தாக்குவது அர்த்தமற்றது. அதற்கான தேவை இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம். அரசியல் தேவையும் இல்லை. இராணுவத் தேவையும் இல்லை.


ஆபத்தான, ரத்தக்களரி நிறைந்த அசிங்கமான ஆதிக்க விளையாட்டில் மற்ற நாடுகளின் மீது தங்கள் விதிமுறைகளை திணிக்க அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் முயற்சிக்கின்றன" என்றார்.


உலகம் ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளது. மேற்குலக நாடுகள் இனி மனிதகுலத்திற்கு அதன் விருப்பத்தை ஆணையிட முடியாது. ஆனால், அதைச் செய்ய முயற்சிக்கின்றன. மேலும் பெரும்பான்மையான நாடுகள் அதை இனி பொறுத்துக்கொள்ள விரும்பவில்லை. மேற்கத்திய கொள்கைகள் மேலும் குழப்பத்தை தூண்டும். மேலும், காற்றை விதைப்பவன் சூறாவளியை அறுவடை செய்வான்.


ரஷியா, மேற்கத்திய நாடுகளின் எதிரி அல்ல. ஆனால் மேற்கத்திய நவ-தாராளவாத உயரடுக்கின் உத்தேச கட்டளைகளை தொடர்ந்து எதிர்க்கும். அவர்கள் ரஷியாவை அடிபணியச் செய்ய முயற்சிக்கின்றனர். அவர்களின் இலக்கே ரஷியாவை பாதிப்புக்குள்ளாவதுதான். அவர்களின் புவிசார் அரசியல் பணிகளை நிறைவேற்றுவதற்கான ஒரு கருவியாக மாற்றுவது அவர்களின் குறிக்கோள். அவர்கள் அதை அடையத் தவறிவிட்டனர். அவர்கள் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள்" என்றார்.