ஹாங்காங்கில் உள்ள ஓஷன் பார்க் எனும் தீம் பார்க்கில் An An என்ற ராட்சத பாண்டா பராமரிக்கப்பட்டு வந்தது. மனிதர்களின் பராமரிப்பில் உலகிலேயே மிக நீண்ட காலம் உயிர் வாழ்ந்த ஆண் ராட்சத பாண்டா என்ற பெருமையை பெற்ற இது, வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்துள்ளது. An An பாண்டாவிற்கு வயது, 35. மனிதர்களின் வயது படி கணக்கிட்டால் இந்த பாண்டாவிற்கு 105 வயதாகிறதாம்!
பரிசாக அளிக்கப்பட்ட பாண்டா!
An An 1986ஆம் ஆண்டு சீனாவில் பிறந்தது. அதன் பிறகு அந்நாட்டிலுள்ள வாலாங் தேசிய பூங்காவில் சிறிது காலம் வளர்ந்து வந்தது. பின்னர்,1999 ஆம் ஆண்டு, Jia Jia என்ற பெண் பாண்டாவுடன் பீஜிங் நாட்டின் சார்பாக ஹாங்காங் ஓஷன் பார்க்கிற்கு பரிசாக அளிக்கப்பட்டது இந்த ராட்சத பாண்டா. 2017ஆம் ஆண்டில் மனிதர்களின் பராமரிப்பில் நீண்ட நாள் வாழும் ராட்சத பாண்டா என்ற பெருமையை பெற்றது An An பாண்டா. கடந்த வருடம் ஆகஸ்ட மாதம் தான் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடிய An Anன் உயிரிழப்பு பாண்டா பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உயிரிழந்த பாண்டா...
An An, உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் சுற்றுலா பயணிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன் ஓஷன் பார்க் அறிக்கையை வெளியிட்டது. அதன் பிறகு யார் கண்களிலும் படாமல் வைக்கப்பட்டிருந்த An An இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஓஷன் தீம் பார்க், பாண்டாவின் உடல் நிலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மோசமடைந்து வந்ததாகவும், அதனால் An An உணவு உட்கொள்ளும் அளவு குறைந்து, இறுதியில் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டது என்றும் தெரிவித்தனர்.
“An An பாண்டா எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல இருந்து வந்தான். அவன் சுற்றுலாப் பயணிகளுடனும் உள்ளூர் வாசிகளுடனும் நல்ல நட்பை உருவாக்கியுள்ளான். அவனது விளையாட்டுதனமும் குரும்புத்தனமும் மிகவும் இழக்கப்படும்” என தீம் பார்க்கின் தலைவர் Paulo Pong தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உயிரிழந்த பாண்டாவிற்காக ஓஷன் பார்க்கில் தனி பூத் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தீம் பார்க் உழியர்களும், சுற்றுலா பயணிகளும் மலர் கொத்துக்களை வைத்து உயிரிழந்த பாண்டாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், அங்கு வரும் குழந்தைகளும் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தில் கையெழுத்திட்டும், பாண்டாவின் படத்தை வரைந்தும் An An காக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் இரண்டு பாண்டா கரடிகள்!
An An மட்டுமின்றி, ஓஷன் பார்க்கில் மேலும் இரண்டு பாண்டாக்கள் உள்ளன! அவை Le Le என்ற ராட்சத ஆண் பாண்டாவும்,Ying Ying என்ற பெண் பாண்டாவும் தான். An An பாண்டாவின் உயிரிழப்பால் வாடியுள்ள சுற்றுலா பயணிகளுக்கு மற்ற இரண்டு பாண்டாக்கள் இன்னும் இந்த பூங்காவில் அமைந்துள்ளது, ஆறுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.