ஆஸ்திரேலியாவில் செம்மறி ஆடு ஒன்று 2 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த ஆடு மிக விரைவாக வளர்வதாகவும், இக்காரணத்தினாலேயே இவ்வளவு அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்  தெரிவிக்கின்றன.


ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த எலைட் ஆஸ்திரேலியன் ஒயிட் சிண்டிகேட் என்ற நான்கு பேர் கொண்ட குழு தான், இந்த ஆஸ்திரேலிய ஒயிட் ஸ்டட் இன ஆட்டினை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.


 



இது குறித்து டிஎன்ஏ இதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, "இந்த செம்மறி, குழுவில் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படும். இந்த செம்மறி ஆட்டின் மரபியல் அமைப்பு (ஜெனெட்டிக்ஸ்)  மற்ற செம்மறி ஆடுகளை வலுப்படுத்த பயன்படும். இந்த செம்மறி ஆடு அதிக வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. அதிலும் இந்த குறிப்பிட்ட செம்மறி ஆடு மிக வேகமாக வளர்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச்சூழலில் முன்னதாக ஆடு ஒன்றை இவ்வளவு விலைக்கு விற்பது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக ஆட்டின் உரிமையாளர் கிரஹாம் கில்மோர் என்பவர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் கம்பளி மற்றும் செம்மறி இறைச்சித் தொழில்கள் எந்த உயரத்துக்கு முன்னேறியுள்ளன என்பதையும் இந்த ஒற்றை செம்மறி ஆட்டின் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


ஆஸ்திரேலியாவில், செம்மறி ஆடுகளின் ரோமங்களை அகற்றும் தொழில் செய்பவர்கள் குறைந்து வருகின்றனர். இச்சூழலில் ரோமங்களை அகற்றுவதற்கான செலவு அதிகரித்து அதன் காரணமாக  ஆட்டிறைச்சியின் விலையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 


அந்நாட்டில் அடர்த்தியான ரோமங்கள் இல்லாத சில வகையான ஆடுகளில் ஒன்று ஆஸ்திரேலிய வெள்ளை செம்மறி ஆடு. இது இறைச்சிக்காகவே பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது.


இதன் விளைவாக, அடர்த்தியான உடல் ரோமங்கள் இல்லாத ஆஸ்திரேலிய வெள்ளை செம்மறி ஆடுகளின் தேவை அதிகரித்து வருவதாகவும் கிரஹாம் கில்மோர் முன்னதாகக் கூறியுள்ளார்.






கடந்த ஆண்டு இதே போல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டபுள் டைமண்ட் எனும் ஆடு 3 லட்சத்து 50 ஆயிரம் கினியாக்கள் அதாவது 3.5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: 'சர்வாதிகாரிக்கு மரணம்'... ஹிஜாப்பை கழட்டி எறிந்து மாணவிகள் முழக்கம்... போராட்டத்தால் அதிர்ந்து போன ஈரான்


Joe Biden : வெள்ளை மாளிகையில் இந்த ஆண்டும் மின்னப்போகும் ஒளி… ஜோ பைடனின் தீபாவளி இப்படி இருக்குமாம்..