உலகின் பெரும் பணக்காரர்களுள் முதல் இடத்தை வகிப்பவரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், ட்விட்டர் தளத்தை கையகப்படுத்துவது உறுதியான நிலையில் ட்விட்டரின் பங்குகள் விற்பனை 23% அதிகரித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தினை வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். தொடர்ந்து எலான் மஸ்குக்கும் ட்விட்டர் நிறுவன பங்குதாரர்களுக்குமிடையே முடிவுகள் இணக்கமாக எட்டப்படாத நிலையில், அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை ரத்து செய்தார். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இச்சூழலில் முன்னதாக ட்விட்டர் நிறுவனத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கி, ட்விட்ட பங்கு ஒன்றை 54.20 டாலர்கள் வீதம் கையகப்படுத்தும் வகையில் ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
எகிறிய பங்குச்சந்தை..
முன்னதாக செவ்வாய்க்கிழமை நியூயார்க் பங்குச்சந்தையில் ட்விட்டர் பங்குகளின் விலை 42 டாலர் என்றளவிலேயே வர்த்தகமானது. ஆனால் ட்விட்டர் தளத்தை மஸ்க் வாங்கும் செய்திகள் உறுதியான நிலையில் அதன் பங்குகளின் விலை உயரத்தொடங்கியது. வர்த்தக முடிவின்போது ஒரு ட்விட்டர் பங்கின் விலை 54.20 டாலர் என்றளவில் வர்த்தகமானது.
டெஸ்லா பங்குகள் சரிவு:
அதே வேளையில் எலான் மஸ்கின் டெஸ்லா பங்குகளின் விலை கடுமையாகச் சரிந்தது. நியூயார்க் பங்குச்சந்தையில் 3% வரை டெஸ்லா பங்குகளின் விலை சரிவு கண்டது. டெஸ்லா பங்குகளின் விலை $250.75 என்ற அளவில் தொடங்கி $ 242.01 என்ற அளவுக்கு சரிந்து பின்னர் வர்த்தக முடிவில் $249.63 என்றளவில் இருந்தது.
எலான் மஸ்க் பின்னணி:
எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளர். இவர் தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். அண்மையில் இவர் ட்விட்டர் சமூக வலைதளத்தை வாங்குவதாகவும் பின்னர் டீலை முறித்துக் கொள்வதாகவும், அதன் நீட்சியாக இப்போது டீல் சீலாகி உள்ளதாகவும் அறிவித்து பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். அவரால் ட்விட்டரின் பங்குகளும் பரபரப்புச் செய்தியாகியுள்ளன.