இன்று உலக தொலைத்தொடர்பு தினம் கொண்டாடப்படுகிறது.  தகவல் தொடர்பிற்கான சங்கம் முதன் முதலாக 1865ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இது "தந்தி சேவை " என்ற பெயர் கொண்டிருந்தது. அதன்பிறகு 1934ம் ஆண்டில்" உலக தொலைத் தொடர்பு சங்கம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கம் துவக்கப்பட்டதன் நினைவாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் மே  மாதம்  17ம் தேதியன்று இந்த தினம் கொண்டாடப்படுகிறது.


நோக்கம்:

உலக தொலைத் தொடர்பு சங்கத்தின் முக்கிய நோக்கம் என்பது  தொலைத்தொடர்பு நாட்டில் எத்தகைய பங்காற்றி வருகிறது என்பதை எடுத்துரைப்பதுதான். மேலும் தகவல் பரிமாற்றத்தில் முக்கிய பங்காற்றி வரும் தொலைத்தொடர்பு சாதனங்கள் குறித்த விழிப்புணர்வுகளையும் இந்த சங்கம் ஏற்படுத்தி வருகிறது.



வளர்ச்சி :

தொலைத்தொடர்பு என்பது தகவல்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்வது. இதற்காக பயன்படுத்தப்படும் சாதனங்களின் வளர்ச்சி இன்று பிரம்மிக்கத்தக்க வகையில் உள்ளது. "ஆரம்ப காலத்தில் மனிதன் செய்திகளை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் புறாவை பயன்படுத்தினான் , இதைத்தான் "புறா விடு தூது " என்கிறது வரலாறு . அதன் பிறகு காகிதத்தின் கண்டுபிடிப்பு , தகவல்தொடர்பில் மிக முக்கிய பங்காற்றியது. இன்று தொழில்நுட்ப வளர்ச்சிகளின் தாக்கம் , தொலைத்தொடர்பு சாதனங்களில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. நொடிப்பொழுதில் செய்திகளை பெறுவதற்கோ அனுப்புவதற்கோ இவை ஏதுவாக உள்ளது. இதில் மொபைல்போன்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.




விதை யார் போட்டது!

தொலைத்தொடர்பு சாதனங்களின் முன்னோடி அச்சு இயந்திரம் . இதனை 1450 ஆம் ஆண்டில் ஜோகன்ஸ் கட்டன்பர்க் என்பவர் கண்டறிகிறார் ஆனால் அவருக்கான அங்கீகாரம் கிடைப்பதற்கு முன்னதாகவே அவர் உயிழந்துவிட்டார். அதன் பிறகுதான் கிராகம்பெல் மின்சாரம் மூலம் இரண்டு கம்பிகளை பயன்படுத்தி ஒரே நேரத்தில் சிக்னலை அனுப்பவும் பெறவும் முடியும் என்ற கோட்பாட்டில்  புதிய கருவியை கண்டுபிடித்தார் . இதன் சோதனையை    1876-ஆம் ஆண்டு மார்ச் 7  ஆம் தேதி வெற்றிகரமாக நிகழ்த்தியும் காட்டினார். அந்த நாளே தொலைபேசி  கண்டுபிடிக்கப்பட்ட நாளாக கொண்டாடப்படுகிறது. கிராகம்பெல்லின் இந்த கருவிதான் தற்போது நாம் பயன்படுத்தும் மொபைல்போன்களின் முன்னோடியாக பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பத்தின் பங்கு :

கம்பிகள் மூலம் பரிமாற்றப்பட்ட தகவல்கள் அதன் பிறகான தொழில்நுட்ப வளர்ச்சியில், ஒயர்லஸ் சாதனங்கள் வழியாக ஊடுறுவ தொடங்கின. அவைதான் வானொலி, தொலைக்காட்சி என தொடங்கி இன்று மின்னஞ்சல், இணையம், முகம் பார்த்து பேசும் செயலிகள் என பல உச்சங்களை அடைந்துள்ளது. தகவல் தொடர்பின் பங்கு என்பது கருத்துகளை பகிர்ந்துக்கொள்வது என்பதை தாண்டி, கல்வி, வேலைவாய்பு, கலை, பொழுதுபோக்கு, விஞ்ஞானம் , அறிவியல் வளர்ச்சி, மருத்துவம் என  பல்வேறு துறைகளிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. இத்தகைய தகவல் தொடர்புகளை அடுத்தக்கட்ட பாதைக்கு எடுத்து செல்வதில் இணையத்தின் பங்கு மேலானது.




அதே நேரத்தில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி , மனித வாழ்வின் பாதுகாப்பற்ற நிலையை   உணர்த்துவதாகவும் உள்ளது. டார்க் வெப் எனப்படும் நிழல் உலகின் செயல்பாடுகள் மனித குலத்தை அழிவு பாதைக்கு இட்டுச்செல்வதற்கான அத்தனை வேளைகளையும் செவ்வனே செய்து வருகின்றன. அதே போல ஒரு நாட்டின் ரகசியங்களை கையாடல் செய்வதற்கும் ,  போர் யுக்திகளை அறிந்துக்கொள்ள நடக்கும் தொழில்நுட்ப உளவு வேட்டை யும் ஒரு புறம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இவை அனைத்தையும் கட்டுப்படுத்தி  தொலைத்தொடர்பை நெறிப்படுத்துவதே " உலக தொலைத் தொடர்பு சங்கத்தின் " முக்கிய வேலை.

இன்று இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்திற்கு காரணமும் தொழில்நுட்பம் தான். அது தான் இன்று இன்றியமையாததாகவும் மாறிவிட்டது.