காஸாவுக்கு எதிரான இஸ்ரேல் நாட்டின் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து அழுத்தம் கொடுக்க சர்வதேச சமூகத்தை 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 


உலகமே கொரோனா அச்சத்தில் துடித்துக்கொண்டிருக்க, இஸ்ரேல்-பாலஸ்தீனம் படைகளுக்கு இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த இரு படைகளுக்கும் இடையே வான் வழி தாக்குதல் மீண்டும் அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் படைகள் தாக்குதல் நடத்தியது. அதன்பின்னர் காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான சண்டை நீண்டகாலமாக நடந்து வந்தாலும் தற்போது மீண்டும் தலைதூக்கக் காரணம் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் ஒரு பழைமை வாய்ந்த மசூதி . 


இந்த மசூதி இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. இதனால் இப்பகுதியை பாலஸ்தீனியர்கள் தங்களுடையது என்கின்றனர். அதற்கு இஸ்ரேலும் சொந்தம் கொண்டாடுகிறது. இந்தச் சூழலில் கடந்த வாரம் அல் அசா மசூதிக்கு அருகில் இருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் படைகள் 5 நாட்களாக தாக்குதல் நடத்தியது. இதில் மசூதிக்கு உள்ளேயும் படைகள் வீசிய குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு பதிலடியாக ஹமாஸ் படை காசா பகுதியிலிருந்து ஏவுகணையை ஏவியது. அதற்கு பதிலடியாக மீண்டும் இஸ்ரேல் காசா பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த பதிலுக்கு பதில் தாக்குதலால் தான் காசா பகுதி பற்றி எரிகிறது.




இரு தரப்பிலும் நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 160க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதலை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் உலக நாடுகள் வலியுறுத்தி வாருகின்றன. ஆனால், காஸா நகர் மீதான மோதல் தொடரும் என்று இஸ்ரேல் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூறியுள்ளார்.


இந்நிலையில், காஸா, இஸ்ரேல் மோதல் தொடர்பாக 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு காணொலி மூலம் அவசர ஆலோசனை மேற்கொண்டது. அதில், காசாவுக்கு எதிரான இஸ்ரேல் நாட்டின் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர  தொடர்ந்து அழுத்தம் கொடுக்க சர்வதேச சமூகத்தை அந்த அமைப்பு வலியுறுத்தியது.


முன்னதாக, கடந்த 15ஆம் தேதி காஸாவில் சர்வதேச ஊடகங்கள் இருந்த வந்த கட்டிடத்தை இஸ்ரேல் ராணுவம் தரைமட்டமாக்கியது. இந்த கட்டிடத்தில், அஸோசியேட்டட் ப்ரஸ், அல்ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேல்-பாலஸ்தீன நாடுகள் என்ன மாதிரியான எதிர்வினையாற்றப் போகின்றன, அமைப்பின் கோரிக்கையை சர்வதேச சமூகம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.