உலகின் 25 பணக்காரக் குடும்பங்களின் சொத்து மதிப்பு கடந்த ஒரே ஆண்டில் $312 பில்லியன் அளவுக்கு உயர்ந்துள்ளது.
கரோனா ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி எல்லாம் ஏழைகளுக்கு, நடுத்தர வர்க்கத்தினருக்கும் தான் போல. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஆகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


அதனால் தான், உலகின் 25 பணக்காரக் குடும்பங்களின் சொத்து மதிப்பு கடந்த ஒரே ஆண்டில் $312 பில்லியன் அளவுக்கு உயர்ந்துள்ளது.


பங்குச்சந்தைகளின் ஏற்றம், பணமாக்குதல் அதிகமானது, சில நாடுகளின் வரிக் கொள்கைகள் பணக்காரர்கள் செல்வத்தை அள்ளிக் கொடுத்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. உலகின் 25 பணக்காரக் குடும்பங்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு மட்டும் 22% அதிகரித்துள்ளது.


* அர்கன்சாஸின் வால்டன்ஸ் குடும்பத்தினர் வால்மார்ட் நிறுவனத்தின் சொத்தில் பாதியளவு சொத்து கொண்டுள்ளனர். இவர்களின் ஆண்டு வருமானம்  தொடர்ச்சியாக 4 வது ஆண்டாக $238.2 பில்லியனைக் கடந்துள்ளது.


* இந்தப் பட்டியலில் இந்த ஆண்டு புதிதாக இடம்பெற்றுள்ளது பிரான்ஸின் டஸால்ட்ஸ் நிறுவனம். தொழில்நுட்பம் மற்றும் வானூர்தி கட்டுமான நிறுவனமான டஸால்ட்ஸும் நியூயார்க்கை மையமாகக் கொண்டு செயல்படும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான எஸ்டீ லாடரும் புதிதாக இணைந்துள்ளன.




* தென்கொரியாவின் சாம்சங் நிறுவனத்தின் உரிமையாளரான லீஸ் குடும்பம் இந்த முறை இந்தப் பட்டியலில் இடம்பெறாமல் விட்டது அதிர்ச்சிகரமானது. லீஸ் குடும்பத்தின் தலைவரான லீ குன் கடந்த ஆண்டு மறைந்தார். இதனால் அவருடைய சொத்துக்கள் வாரிசுகளுக்கு வந்தது. சொத்து மாற்றம் ரீதியாக 11 பில்லியன் டாலர் வரியாக செலுத்தினர். இதனால் அவர்கள் குடும்பம் பட்டியலில் இடம் பெறமுடியாமல் போனது.


* ஸ்டூவர்ட்ஸ் ஆஃப் ஹெர்மேஸ் குடும்பத்தின் சொத்து மதிப்பு மட்டும் அனைவரும் வியக்கும் வண்ணம் கடந்த ஆண்டில் 75% அபிரிமித வளர்ச்சி கண்டு 111.6 பில்லியன் டாலர் என்றளவில் இருக்கிறது.


* இப்படியாக பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு பலமடங்கு அதிகரித்திருப்பது கரோனா பேரிடர் ஏற்படுத்திய ஏழை பணக்காரர்கள் இடைவெளியை மேலும் அதிகரித்துள்ளது. 


இதனாலேயே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மிகப் பெரிய பணக்காரர்களுக்கென் தனியாக பிரத்யேக வரி விதிப்பை ஆலோசித்து வருகிறார். 


ஆனால், இந்தியாவில் மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பின்னர் கார்ப்பரேட் வரி பெருமளவில் குறைக்கப்பட்டது. இதற்கு இன்றளவும் பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரி குறைப்பால் பெரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு மேலும் உயரும் என்பதாலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.