உலக நாடுகள் பலவும் தங்களின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் ராணுவத்துக்குத்தான் இன்றளவும் முதலிடம் கொடுக்கின்றன. ஒரு நாட்டின் ராணுவ பலம் அந்தநாட்டின் பராக்கிரமத்தை அளக்க அதி முக்கியமானதாக இருக்கிறது. வீரர்களுக்கு மேம்படுத்தப்பட பயற்சி, ராணுவத் தளவாடங்களில் உயர் தொழில்நுட்பம், விதவிதமாக நவீன ஆயுதங்கள் மூலம் உலக நாடுகள் தங்களின் ராணுவத்துக்கு பலம் சேர்க்கின்றன. இப்படி சில அளவுகோலைக் கொண்டு குளோபல் ஃபையர்பவர் என்ற இணையதளம் உலக நாடுகளின் ராணுவ பலத்தை கணித்து டாப் 5 ராணுவம் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. 


ஐந்தாம் இடத்தில் ஜப்பான் ராணுவம்:


ஆசிய நாடான ஜப்பான் 5-வது பலம் வாய்ந்த ராணுவப்படையைக் கொண்டிருக்கிறது. இதன் ஆள்பலம் மட்டுமே 247,160. ஜப்பானிடம் 152 உயர்ரக  ஸ்பெஷல் மிஷன் போர் விமானங்கள் (special mission aircraft ) இருக்கின்றன. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஜப்பானில் தான் அதிக போர் விமானங்கள் உள்ளன. தீவு நாடான ஜப்பானுக்கு இது மிகவும் அத்தியாவசியமானதாகக் கருதப்படுகிறது. 3,130 ஆயுதாங்கிய வாகனங்களும், 1004 ராணுவ டாங்கர்களும் 119 ஹெலிகாப்டர்களும் உள்ளன. 2020ம் ஆண்டு மட்டும் ஜப்பான் 49 பில்லியன் டாலர் ராணுவத்திற்காக செலவழித்திருக்கிறது.


அடுத்த இடமும் ஆசிய நாட்டுக்கே..


ஆசியாவின் மற்றுமொரு ஜாம்பவானான நம் இந்திய தேசத்தின் ராணுவம் உலகின் 4-வது தலைசிறந்த பலம் நிறைந்த ராணுவம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ள இந்திய ராணுவத்தின் படைபலம் 1,444,000. வளர்ந்துவரும் நாடுகளில் பலம் வாய்ந்த இந்திய ராணுவத்திடம் 4,292 டாங்கர்கள் உள்ளன. 4,060 பீரங்கிகள், போர் ஆயுத வாகனங்கள் உள்ளன. 538 போர் விமானங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 61 பில்லியன் டாலர் பணத்தை இந்தியா ராணுவத்துக்காக செலவழித்திருக்கிறது.


மூன்றாவது இடத்தில் சீனா..


ஆசியாவின் பொருளாதார வல்லரசான சீனா மூன்றாவது பலம் பொருந்திய ராணுவத்தைக் கொண்டுள்ளது. கம்யூனிஸ சூப்பர் பவரான சீனாவின் ராணுவ ஆள் பலம் 2,183,000. இது உலகிலேயே அதிகமானது. அண்மைக்காலமாக சீனா தனது கடற்படையை பலப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறது. தென் சீனக் கடல் மீதான உரிமைப் போருக்காக சீனா தனது கடற்படையை வலுப்படுத்தி வருகிறது. சீனாவிடம் 74 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. 52 ஃப்ரிகேட்ஸ் (கடற்படையில் பயன்படுத்தப்படும் ஆயுதம்) 36 டெஸ்ட்ராயர்களைக் கொண்டுள்ளதாக குளோபல் ஃபையர்பவர் இணையதளம் தெரிவிக்கின்றது. சீனாவிடம் 33,000 ஆயுதம் தாங்கிய வாகனங்கள் உள்ளன. சீன விமானப்படையில் 1232 போர் விமானங்கள் உள்ளன. 281 ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன. சீன ராணுவம் 2020ல் 237 பில்லியன் டாலர் பணத்தை ராணுவத்திற்காக செலவழித்து அடேங்கப்பா என வியக்கவைக்கிறது.


ரஷ்யா.. உலகின் 2-ஆம் பலம் பொருந்திய ராணுவம்


ரஷ்யா என்றால் முதலில் உளவாளிகள் தான் நினைவுக்கு வருவர். அதற்கு ஹாலிவுட் சினிமாக்கள் கூட காரணமாக இருக்கலாம். ஆனால்,  உலகளில் 2வது பலம் பொருந்திய ராணுவம் ரஷ்ய நாட்டு ராணுவம் என்பதே அந்நாட்டின் உண்மையான பெருமையாகக் கருதப்படுகிறது. ரஷ்ய ராணுவத்தில் 1,013,628 வீரர்கள் உள்ளனர். 27,038 ஆயுதம் தாங்கிய வாகனங்கள், 6,083 தானியிங்கி பீரங்கிகள், 3,860 ராக்கெட் ஏவுகணைகள் உள்ளன. ரஷ்ய விமானப் படையில் 873 போர் விமானங்கள் உள்ளன. 531 ஃபைட்டர் ஹெலிகாப்டர்கள் உள்ளன. 62 நீர்மூழ்கிக் கப்பல்களும், 48 சுரங்க போர்க்கப்பல்களும் இருக்கின்றன. ரஷ்யா சராசரியாக ஆண்டுக்கு 48 பில்லியன் டாலர் செலவிடுகிறது.


அமெரிக்காவுக்குத்தான் முதலிடம்..


நாங்கள் ஏன் சூப்பர்பவர் தெரியுமா என அமெரிக்கர்கள் மார்தட்டிக் கொள்ளும் வகையில் அமெரிக்க ராணுவம் உலகின் தலைசிறந்த ராணுவமாக இருக்கிறது. அமெரிக்காவிடம் 2,085 போர் விமானங்கள், 967 ஹெலிகாப்டர்கள், 742 ஸ்பெஷல் மிஷன் போர் விமானங்களைக் கொண்டுள்ளது. மேலும், 39,253 ஆயுதம் தாங்கிய வாகனங்கள், 91 டெஸ்ட்ராயர்கள், 20 விமானம் தாங்கும் கப்பல்கள், 1,400,000 வீரர்களைக் கொண்டுள்ளது. 2020 பட்ஜெட்டில் அமெரிக்கா தனது ராணுவத்துக்கு 750 பில்லியன் டாலர் ஒதுக்கியது.