கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் கண்டறியப்பட்ட, உருமாறிய கொரோனாவின் இரண்டு கொடிய வகைகளுக்கு அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் சிறந்த முறையில் பயனளிப்பதாக அமெரிக்க உயர்மட்ட சுகாதார அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் உலக சுகாதார அமைப்பால் 'கவலைக்குரிய மாறுபாடு' அடைந்த கொரோனா வைரஸாக பிரகடனம் செய்யப்பட்டது பி.1.617 என்ற வகையை சேர்ந்த கொரோனா என்பதும் குறிப்பிடத்தக்கது. 




NIAID என்று அழைக்கப்படும் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான அமெரிக்க தேசிய நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர். அந்தோணி பவூசி கடந்த செவ்வாயன்று நடத்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கண்டறியப்பட்ட பி617 மற்றும் பி1618 ஆகிய வகைகளை சேர்ந்த கொரோனா வைரஸ்களை எதிர்த்து தற்போது அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் மிகவும் சிறந்த முறையில் செயல்படுவதாகவும். குறிப்பாக தீவிர நிலையில் இருக்கும் நோயாளிகளிடம் அமெரிக்கா தடுப்பூசிகள் சிறந்து செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.  
   
வெள்ளை மாளிகையின் கொரோனவிற்கான மூத்த ஆலோசகர் ஆண்டி ஸ்லவிட் வெளியிட்ட அறிக்கையில் இந்தியவில் கண்டறியப்பட்ட மாறுபட்ட கொரோனா தொற்றுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசிகள் அமெரிக்காவிடம் உள்ளது என்றும், ஆகையால் மக்கள் தவறாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார். 




கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக ரஷ்யா தயாரித்துள்ள தடுப்பூசி தான் ஸ்புட்னிக் வி. ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம் இந்தியாவில் தங்கள் பங்குதாரர்களான டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகத்தின் மூலம் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை விநியோகம் செய்ய அண்மையில் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் கடந்த மே 14ம் தேதி ஐதராபாத்தில் செலுத்தப்பட்டுள்ளது. மே 1ம் தேதி ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியா வந்திறங்கியது குறிபிடத்தக்கது. 


மே 13ஆம் தேதி மத்திய மருந்து ஆய்வகம் இந்தியாவில் இதனை பயன்படுத்துவதற்கான ஒப்புதலை அளித்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் இருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும்  நிலையில், இதன் விலை 948 ரூபாய் - அத்துடன் 5 சதவீத ஜிஎஸ்டி வரியும் சேர்க்கப்பட்டு ஒரு டோஸ் ஸ்புட்னிக் 995 ரூபாய் 40 பைசா என இந்திய சந்தைக்கு வரவுள்ளது. மேலும் ஸ்புட்னிக் வி 91.6% செயல்திறன் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோன எதிராக பயன்பாட்டிற்கு வரும் மூன்றாவது தடுப்பூசி இதுவாகும், ஏற்கனவே கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.




அடுத்த வாரத்தில் இருந்து ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியா சந்தைகளில் கிடைக்க தொடங்கும் என்று டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் தெரிவித்துள்ளது. வரப்போகும் மாதங்களில் மேற்கொண்டு ஸ்புட்னிக் இறக்குமதி செய்யப்படும், அதே நேரம் இந்தியாவில் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதன் உற்பத்தி தொடங்கியவுடன் இதன் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உலக அளவில் இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் ஸ்புட்னிக் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.