இன்றைய காலகட்டத்தில் உலகின் எந்த பகுதிகளில் இருந்தாலும் கூட தொலைபேசி மூலமோ குறுஞ்செய்தி மூலமோ நலம் விசாரிக்கின்றோம். ஆனால், மொபைல் பயன்பாடு வருவதற்கு முன்னர் கடிதங்கள் தான் மக்களுக்கு மகத்தான சேவையை புரிந்துள்ளது. அந்தவகையில் அஞ்சல் முறை பழமையான தகவல்தொடர்பு முறை என அழைக்கப்படுகிறது. அதற்காக உலக அஞ்சல் தினம் (World Post Day) என ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ஆம் தேதி சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. 1874-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மொத்தம் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



1969-ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1840களில் இங்கிலாந்தில், சர் ரோலண்ட் ஹில் ஒரு அமைப்பைக் கொண்டு வந்தார். உலகின் முதல் தபால் தலையை அறிமுகப்படுத்தியவர் இவரே. அதன் பின்னர், 1874-ஆம் ஆண்டு பெர்னில் , வட ஜெர்மன் கூட்டமைப்பின் மூத்த அஞ்சல் அதிகாரி ஹென்ரிச் வான் ஸ்டீபன் ஒரு சர்வதேச அஞ்சல் தொழிற்சங்கத்திற்கான திட்டத்தை வகுத்தார். அவரது ஆலோசனையின் அடிப்படையில், சுவிஸ் அரசாங்கம் செப்டம்பர் 15, 1874 அன்று பெர்னில் ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தியது, அதில் 22 நாடுகள் தங்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதே ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி, பொது அஞ்சல் ஒன்றியத்தை நிறுவுவதன் மூலம் உலக அஞ்சல் நாள் தொடங்கப்பட்டது. 1878-ஆம் ஆண்டில், அதன் பெயர் யுனிவர்சல் தபால் ஒன்றியம் என்று மாற்றப்பட்டது. 1874-இல் கையெழுத்திடப்பட்ட பெர்ன் ஒப்பந்தம், சர்வதேச அஞ்சல் சேவைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பரிவர்த்தனை மற்றும் கடித பரிமாற்றத்திற்கான ஒரே அஞ்சல் பிரதேசமாக ஒழுங்குபடுத்துவதில் வெற்றி பெற்றது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ஆம் தேதி உலக அஞ்சல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்திய அஞ்சல் துறை 1764இல் துவக்கப்பட்டது. 



வேர்ட் போஸ்ட் டே 2021 இல் அதன் தலைப்பாக 'இனோவேட் டு ரெகவர்' என்று அறிவித்துள்ளது. "உலகின் அனைத்து நாடுகளையும் கோவிட் -19 பாதித்தபோது, தெளிவான கட்டமைக்கப்பட்டிருந்த தொடர்பு சம்மந்தப்பட்ட சேவைகளே வீழ்ந்த நிலையில், சமூகங்களுக்கு தொடர்ந்து சேவைகளை வழங்க போஸ்ட் புதிய புதிய உத்திகளை கண்டறிந்து செயல்பட்டு வந்தது. இது அஞ்சல் துறை ஏற்படுத்திய புதுமை. இந்த ஆற்றலான செய்தியோடு உலக அஞ்சல் தினத்தை கொண்டாடுகிறோம்" என்று யுபியு இயக்குனர் ஜெனரல் பிஷார் ஏ ஹுசைன் கூறினார். இந்தியாவில்தான் உலகிலேயே அதிக அஞ்சலகங்கள் உள்ளன. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55,333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.