ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 அன்று, சர்வதேச ஓசோன் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1994ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளைத் தேர்வு செய்து, பூமியில் வாழும் உயிர்களை ஆபத்தான புற ஊதாக் கதிர்களிடம் இருந்து காக்கும் பணியைச் செய்யும் ஓசோன் மண்டலத்தைப் பாதுகாப்பதற்கான முக்கியத்துவத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க உறுதிசெய்தது. 


எதற்காக ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்பட வேண்டும்? 


ஓசோன் மண்டலம் பூமியில் வாழும் உயிர்களைப் பாதுகாக்கிறது!


பூமியின் உயிர்கள் வாழ்வதற்குச் சூரிய ஒளி தேவைப்படுகிறது. எனினும், ஓசோன் மண்டலம் இல்லாமல், பூமியில் உயிர்கள் வாழ முடியாது. சூரியனில் இருந்து வெளியேறும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களிடம் இருந்து ஓசோன் மண்டலம் பூமியைப் பாதுகாக்கிறது.


1970களின் இறுதியில், ஓசோன் மண்டலத்தில் துளை ஒன்றைக் கண்டுபிடித்தனர். பூமியில் உற்பத்தியாகும் நச்சு வாயுக்களால் ஓசோன் மண்டலம் அழிந்து வருவதாகத் தெரிய வந்தது. இந்த நச்சு வாயுக்கள் ஃப்ரிட்ஜ்கள், ஏசி ஆகியவற்றைப் பயன்படுத்தும் போது வெளிவருபவை. ஓசோன் மண்டலத்தைப் பாதுகாக்க, பல்வேறு நாடுகள் இணைந்து 1985ஆம் ஆண்டு வியன்னா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஓசோன் மண்டலத்தின் முக்கியத்துவம் குறித்து மனிதர்களுக்குப் பல ஆண்டுகளாக தெரிய வந்தாலும், அதனைப் பாதுகாக்கும் தேவை முன்பை விட அதிகரித்துள்ளது. 



பூமியில் கடந்த நூற்றாண்டில் அதிக அளவில் பெருகிய தொழிற்சாலைகளால் பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இவை தட்பவெப்ப நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்துவது, காட்டுத் தீயை உருவாக்குவது, உலகம் இதுவரை காணாத அளவுக்குப் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படுத்துவது முதலானவற்றை செய்து வருகிறது. 


லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களின் முடிவுகளின்படி, ஓசோன் மண்டலம் இல்லாமல் இருந்தால், பூமியின் நிலை மிகவும் கவலைக்குரியதாக மாறிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதில் பூமியின் வெப்ப நிலையில் 0.5 முதல் 1 டிகிரி செல்சியஸ் வரை மாற்றம் ஏற்படும். ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படவில்லை என்றால் காலநிலை மாற்றத்தாம் பூமி அழியும் நிலை உருவாகும். 


புற ஊதாக் கதிர்களிடம் இருந்து பாதுகாக்கப்படவில்லை எனில், செடிகளால் கார்பன் டை ஆக்ஸைட் வாயுவை உட்கொள்ள முடியாது. இதனால் காலநிலை மாற்றம் வேகமாக நிகழும். இந்த ஆய்வு முடிவுகளின்படி, நச்சு வாயுக்கள் வெளியேற்றத்தைக் கண்காணிக்காமல் இருந்தால், 2040ஆம் ஆண்டுக்குள் ஓசோன் மண்டலம் அழிவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சர்வதேச நாடுகள் நச்சு வாயுக்களின் அளவுகளைக் கண்காணிக்க வியன்னாவில் மாண்ட்ரியல் ஒப்பந்தம் (Montreal Protocol) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 


ஓசோன் மண்டலத்தைப் பாதுகாப்பது எப்படி?



CFC என்று அழைக்கப்படும் நச்சு வாயுக்களை உற்பத்தி செய்யும் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நாம் தினமும் பயன்படுத்தும் ஏ.சி, ஃப்ரிட்ஜ் முதலான பொருள்களில் CFC வகை வாயுக்கள் கசியாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். 


பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி, தனிநபர் வாகனப் பயன்பாட்டைக் குறைக்கலாம். பூமியின் வளங்களையும், இயற்கை எல்லைகளையும் பாதுகாக்கும் சர்வதேச அரசியல் நடவடிக்கைக்கு வியன்னா ஒப்பந்தமும், மாண்ட்ரியல் ப்ரொட்டோகாலும் உதாரணமாக இருக்கின்றன. அதனைப் போன்று, அனைவரும் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கவில்லையெனில், பூமியில் நிகழும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக மனிதர்களால் எதுவும் செய்ய இயலாது. இதில் ஓசோன் மண்டலத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.