World Oldest Dog: உலகின் வயதான நாய் என்ற பிரிவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது 31 வயதான ’பாபி’ என்ற நாய். 


உலகம் முழுவதும் பெரும்பாலானோர் வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர். செல்லப்பிராணிகளை வளர்ப்பது பெரும்பாலானோருக்கு பிடித்த ஒரு முக்கிய வழக்கமாக உள்ளது. குறிப்பாக, நாய்களை அதிலும் விலை உயர்ந்த உயர் ரக மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நாய்களை வளர்ப்பதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். குடும்பத்தில் ஒரு நபராகவே அந்த செல்லப்பிராணிகளை கருதி, மிகுந்த பாசமுடன் வளர்த்து அதற்கேற்ற சகல வசதிகளையும் வீடுகளிலேயே செய்து தருகின்றனர். 


உலகின் வயதான நாய்: 


இந்நிலையில், உலகின் வயதான நாய் என்ற பிரிவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது 31 வயதான 'பாபி' என்ற வளர்ப்பு நாய். இந்த நாய் போர்ச்சுகீசிய நாட்டைச் சேர்ந்த குடும்பம் ஒன்றால் வளர்க்கப்படுகிறது. அண்மையில் தான் இது தனது 31வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. பாபி என்ற பெயர் கொண்ட இந்த நாய்  13 பவுண்ட் எடை கொண்டது.






இதன் உரிமையாளர் லியோனஸ் கோஸ்டா (Leonel Costa) இவர் கடந்த 1992ஆம் ஆண்டு பதிவு செய்து இந்த நாயை வாங்கி உள்ளார். அவருடைய 15வது வயதிலிருந்து நாயை வளர்த்து வருகிறார். ரஃபீரோ டோ அலன்டெஜோ (Rafeiro do alentejo) என்ற போர்ச்சுகீசிய நாய் இனத்தை சேர்ந்தது. மிகவும் அமைதியான சூழ்நிலையில் பாபி வளர்ந்ததால் நீண்ட காலம் உயிர் வாழ முடிந்து இருப்பதாகவும் அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஆனால் பாபிக்கு வயதாகிவிட்டதால்  தற்போது சரியாக நடக்க முடியவில்லை என்றும், கண்பார்வையும் மங்கிவிட்டதாக உரிமையாளர் கூறினார்.


பிறந்தநாள் கொண்டாட்டம்: 


 உலகின் வயதான பாபி என்ற வளர்ப்பு நாய்க்கு வியாழக்கிழமை 31வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மேலும், பாபியின் குடும்பம் இதனை கொண்டாடும் விதமாக கடந்த 11ஆம் தேதி போர்ச்சுகீஸில் உள்ள தங்கள் வீட்டில் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்து இருந்தனர். 100 பேர் வரை அழைக்கப்பட்டு இருந்த பிறந்தநாள் கொண்டாட்ட விருந்தில், ஆடல் பாடல் உடன் பாபியின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாட்ப்பட்டது என்று உரிமையாளர் கோஸ்டா தெரிவித்தார்.


உலகின் வயதான பூனை:


கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் வயதான பூனை பற்றியும் தெரிந்து கொள்வோம். 26 வயதான பூனை தான் உலகின் வயதான பூனை என்ற பெருமையை பெற்றுள்ளது. இது இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ளது. இதன் பெயர் ஃப்ளாஸி. 26 வயதாகிவிட்டதால் இந்தப் பூனைக்கு இப்போது காது சுத்தமாகக் கேட்கவில்லை. கண்ணில் பார்வை முழுமையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.