Pakistan Coal Mine Clash : பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த ஆண்டும் ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. பல்வேறு எதிர்புகளுக்கு மத்தியில் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இம்ரான் கான் பதவி விலகினார். தற்போது பாகிஸ்தான் முஸ்லீம் லிக் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தானில் இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. ஒரு பக்கம் அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்கான் கைது செய்யப்பட்டது அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என்றும் அவரை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. இதனை அடுத்து, இம்ரான் கானுக்கு பிணை வழங்கி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது ஒருபக்கம் இருக்க, மற்றொரு பக்கம் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் பாகிஸ்தான் நாடு திணறி வருகிறது. ஒரு வேளை உணவிற்கே நடுத்தர மற்றும் கீழ்தட்டில் இருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில், தற்போது ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது.
16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் வடமேற்கு பிராந்தியத்தில் நிலக்கரி சுரங்கப்பாதை எல்லை நிர்ணயம் செய்வதில் நேற்று சன்னி கேல் மற்றும் ஜர்குன் கேல் என்ற இரு சமூகத்தினருக்கு இடையே சண்டை ஏற்பட்டது. சுரங்க எல்லை நிர்ணயம் தொடர்பாக கோஹட் மாவட்டத்தில் பெஷாரில் இருந்து தென்மேற்கே 35 கி.மீ தொலைவில் உள்ள தர்ரா ஆடம் கெக் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் இருதரப்பினர் இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறையில் காயமடைந்தவர்களை மீட்டு பெஷாஷர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போதை வரை வெளியாகவில்லை. ஆனால் துப்பாக்கிச் சண்டையில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தர்ரா ஆதம் கேல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்களை பிரித்துக் கொள்வதில் 2 குழுவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நிலக்கரி சுரங்கத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பாக சன்னிகேல் மற்றும் ஜர்குன் கேல் பழங்குடியினருக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகள் மோதல் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.