அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடற்கரை பகுதியில் இந்த காட்டுத்தீ முதலில் பரவ ஆரம்பித்திருக்கிறது. கடற்கரை பகுதிகளில் காற்று வேகமாக வீசுவதால் காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறை, மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணிக்கும் பணியிலும் மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்டுத்தீ வீடுகளுக்குள்ளும் பரவி கட்டிடங்கள் தீக்கிரையாகி வருகின்றன. இதனால் சுமார் 10ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் நாசம் ஆகியுள்ளன. மேலும், சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த காட்டுத்தீயால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீக்கு 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் குறையாததால் ஆளுநர் கவின் நியூசம் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். புதன்கிழமை இரவு காற்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும் ஆனால் குறைந்தபட்சம் வியாழக்கிழமை வரை நிலைமை மோசமாக இருக்கும் என்றும் முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். ஓரிகான், நியூ மெக்ஸிகோ மற்றும் வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த குழுவினர் உட்பட கிட்டத்தட்ட 5,000 மீட்புப் பணியாளர்கள் களத்தில் இருப்பதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் ராபர்ட் லூனா கூறுகையில், பல துறை ஊழியர்கள் தீ விபத்தில் வீடுகளை இழந்துள்ளனர்.
"நாங்கள் மற்ற அனைத்தையும் விட உயிருக்கு முன்னுரிமை அளிக்கிறோம்," என்று லூனா தெரிவித்துள்ளார். கொள்ளையடித்ததற்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
இதற்கிடையில், கலிபோர்னியா தீயை எதிர்த்துப் போராடுவதற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் நீர் விநியோக வாளிகளுடன் கடற்படை ஹெலிகாப்டர்கள் உட்பட பாதுகாப்புத் துறை கூடுதல் ஆதாரங்களை வழங்கி வருவதாக பைடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட தீயணைப்புத் தலைவர் அந்தோணி மர்ரோன் கூறுகையில், “இந்த தீ விபத்தில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக கட்டடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் அழிந்துள்ளன. அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் பாதையில் இருந்த முதல் மீட்புப் பணியாளர்களைத் தவிர, வெளியேறாத குடியிருப்பாளர்களுக்கு அதிக காயங்கள் ஏற்பட்டன" என்று அவர் கூறினார்.