ராணுவத்திற்காக உலக நாடுகள் கடந்த ஆண்டில் செலவு செய்த தொகை இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.


3.7 சதவிகிதம் உயர்வு:


உலகளாவிய ராணுவச் செலவினம் 2022 இல் 3.7 சதவீதம் அதிகரித்து, 2240 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ஒரு கோடியே 83 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. ஐரோப்பிய நாடுகளில் ராணுவ செலவினம் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.  ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள கடந்தாண்டிற்கான உலகளாவிய ராணுவச் செலவினங்களின் புதிய தரவுகளின்படி, 2022-ல் ராணுவத்திற்காக அதிக நிதி ஒதுக்கிய நாடுகளில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா முதல் மூன்று இடங்களில் உள்ளன. உலகின் மொத்த ராணுவ செலவினத்தில் குறிபிட்ட 3 நாடுகள் மட்டும் 56 சதவிகிதத்தை செலவழித்துள்ளன. 


காரணம் என்ன?


உக்ரைனுக்கான உலக நாடுகளின் ராணுவ உதவி மற்றும் ரஷ்யாவிடமிருந்து அதிகரித்த அச்சுறுத்தலால் கிழக்கு ஆசிய நாடுகளில் நீடிக்கும் பதற்றம் ஆகியவை ராணுவ செலவினங்கள் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய ராணுவச் செலவினங்கள் தொடர்ச்சியாக அதிகரிப்பது, நாம் அதிகளவில் பாதுகாப்பற்ற உலகில் வாழ்கிறோம் என்பதற்கான அறிகுறி என, ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனம் என தெரிவித்துள்ளது.


01. அமெரிக்கா - 877 பில்லியன் டாலர்கள்


உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்கா 877 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது, 71 லட்சம் கோடி ரூபாயை கடந்த ஆண்டு ராணுவத்திற்காக செலவு செய்துள்ளது. இது இரண்டாவது இடத்தில் உள்ள சீனா செய்த செலவை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். அதோடு, உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவில் 39 சதவிகிதம் ஆகும். பணவீக்கம் இல்லாவிட்டால் இந்த செலவு மேலும் அதிகரித்து இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.


02. சீனா, 292 பில்லியன் டாலர்கள்


சீனா 292 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 23 லட்சம் கோடி ரூபாயை கடந்த ஆண்டு ராணுவத்திற்காக செலவு செய்துள்ளது. இது 2021ஐ விட 4.2 சதவிகிதமும்,  2013ஐ விட 63 சதவிகிதமும் அதிகமாகும். சீனாவின் ராணுவச் செலவு தொடர்ந்து 28வது ஆண்டாக அதிகரித்துள்ளது.


03. ரஷ்யா, 86.4 பில்லியன் டாலர்கள்


ரஷ்ய ராணுவச் செலவு 2022 இல் 9.2 சதவீதம் அதிகரித்து சுமார் 86.4 பில்லியன் டாலர்களாக அதாவது 7 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது 2021ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7 சதவீதமாக இருந்த ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2022ல் 4.1 சதவீதமாக இருந்துள்ளது.


04. இந்தியா, 81.4 பில்லியன் டாலர்கள்


இந்தியாவின் ராணுவ செலவினர் கடந்த ஆண்டில் 81.4 பில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 6.6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 2021ஐ விட 6.0 சதவீதம் அதிகமாகும்.


05. சவுதி அரேபியா, 75 பில்லியன் டாலர்கள்


சவுதி அரேபியா கடந்த ஆண்டில் மட்டும் 75 பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில், 6.1 லட்சம் கோடி ரூபாயை செலவழித்துள்ளது. இது முந்தைய ஆண்டைய காட்டிலும் 16 சதவிகிதம் அதிகம் ஆகும். 2018ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக சவுதி அரேபியாவின் ராணுவ செலவு அதிகரித்துள்ளது.


இந்த நாடுகளை தொடர்ந்து ராணுவ செலவில் நைஜீரியா, நேட்டோ உறுப்பு நாடுகள்,  இங்கிலாந்து, துருக்கி மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.