டிஸ்னி நிறுவனத்தில் மேலும் நான்காயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் மறுசீரமைப்பு பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
4000 பேர் பணிநீக்கம்:
டிஸ்னி குழுமம் தனது முதற்கட்டபணிநீக்க நடவடிக்கையை திங்கட்கிழமை தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை வரும் வியாழன் வரை தொடரும் என கூறப்படுகிறது. அந்த குழுமத்தின் டிஸ்னி எண்டர்டெயின்மென்ட், ஈ.எஸ்.பி.என்., டிஸ்னி பூங்காக்கள், டிஸ்னி பொருட்கலின் விற்பனை நிலையங்களில் பணி செய்யும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என கூறப்படுகிறது. குறிப்பாக கலிபோர்னியா, நியூயார்க், கன்னெக்டிகட் மற்றும் எல்ஸ்வேர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஊழியர்கள் தான், இரண்டாம் கட்ட பணிநீக்க நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”2 மாதங்களுக்கு தொடரும்”
இதுதொடர்பாக ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள தகவலில், ”நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொடரும். ஏற்கனவே தெரிவித்ததை போன்று கோடைகாலத்திற்கு முன்பாகவே அடுத்தகட்ட பணிநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2ம் கட்ட பணி நீக்க நடவடிக்கைகள் மூலம், மேலும் மூவாயிரம் பேரின் வேலை பறிக்கப்படும் என கூறப்படுகிறது.
திட்டம் என்ன?
5.5 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கான செலவைச் சேமித்து அதன் ஸ்ட்ரீமிங் வணிகத்தை லாபகரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து டிஸ்னி நிறுவனம் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. அதனை தொடர்ந்து முதற்கட்டமாக தற்போது நான்காயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணியை டிஸ்னி நிறுவனம் தொடங்கியுள்ளது. இது அண்மையில் மீண்டும் டிஸ்னியின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற பாப் எல்கரின் முடிவு என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்ட பணிநீக்கம்:
Disney+ இன் சந்தாதாரர்கள், வெகுவாக சரிந்து 168.1 மில்லியன் வாடிக்கையாளர்களாக குறைந்தது தான் ஊழியர்களின் பணி நீக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய கேளிக்கை பூங்கா நிறுவனம்தான் இந்த வால்ட் டிஸ்னி. இது பல்வேறு நாடுகளில் தங்களது கேளிக்கை பூங்கா கிளைகளை நிறுவியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு கீழ் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் வால்ட் டிஸ்னி நிறுவனம் 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்த சூழலில், 5.5 அமெரிக்க டாலர்களை செலவை சேமிக்கும் வகையில் சுமார் 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமக ஏற்கனவே, ட்விட்டர், மெட்டா போன்ற பல பெருநிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.