Donald Trump Shot: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்திற்கு, உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு:


நடப்பாண்டின் இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபரான ஜோ பைடனை எதிர்த்து, முன்னாள் அதிபர் டிரம்ப் களம் கண்டுள்ளார். இருதரப்பினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டபோது, டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதிருஷ்டவசமாக இதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த தாக்குதலில் டிரம்பின் ஆதரவாளர் உருவர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின், முன்னாள் அதிபர் மீதே நடந்துள்ள இந்த கொலை முயற்சி அந்த நாட்டை மட்டுமின்றி மற்ற பகுதிகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும், டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


உலக தலைவர்கள் கண்டனம்:


பிரதமர் மோடி கண்டனம்:


பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எனது நண்பரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை கொள்கிறேன். சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுடன் உள்ளன” என குறிப்பிட்டுள்ளார். 






இங்கிலாந்து பிரதமர் கண்டனம்:


இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பேசுகையில், “டிரம்ப் மீதான தாக்குதல் தொடர்பான அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அதிர்ச்சியூட்டுகின்றன. எந்த வடிவத்திலும் அரசியல் வன்முறைக்கு நமது சமூகத்தில் இடமில்லை" என்று தெரிவித்துள்ளார்.


ஐரோப்பா அமைப்பு கண்டனம்:


ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், டிரம்ப் மீதான  தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், "மீண்டும் ஒருமுறை, அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிரான ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறைச் செயல்களை நாங்கள் காண்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இஸ்ரேல் கண்டனம்:


அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "டிரம்ப் மீதான வெளிப்படையான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்," என குறிப்பிட்டுள்ளார்.


கனடா கண்டனம்:


கனடா பிரதமர் ஜஸ்ட்ன் ட்ரூடோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அரசியல் வன்முறைகள் "ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து நான் வேதனையடைந்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.


இத்தாலிய பிரதமர் கண்டனம்:


இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி,  ”பென்சில்வேனியா தாக்குதல் தொடர்பாக கேட்டறிகிறேன்.  டிரம்ப் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். தேர்தல் பரப்புரையில் வெறுப்பு மற்றும் வன்முறையை விட உரையாடல் மற்றும் பொறுப்பு மேலோங்கட்டும்” என வலியுறுத்தியுள்ளார்.


நியூசிலாந்து கண்டனம்:


நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ் லக்சன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எந்த நாடும் இதுபோன்ற அரசியல் வன்முறைகளை எதிர்கொள்ளக்கூடாது" என தெரிவித்துள்ளார்.


அர்ஜெண்டினா குற்றச்சாட்டு:


அர்ஜென்டினாவின் அதிபர் ஜேவியர் மிலே துப்பாக்கிச் சூடு குறித்து பேசுகையில்,  "தேர்தல் தோல்வி பீதியில், இடதுசார்கள் தங்கள் பின்தங்கிய மற்றும் சர்வாதிகார நிகழ்ச்சி நிரலை திணிக்க பயங்கரவாதத்தை நாடுகிறார்கள்" என்று குற்றம்சாட்டினார்.


பிரேசில் அதிபர் சாடல்:


பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பேசுகையில் "ஜனநாயகம் மற்றும் அரசியல் உரையாடலின் அனைத்து பாதுகாவலர்களாலும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.


இதேபோன்று, ஆஸ்திரேலியா, தைவான், கோஸ்டாரிகா, சிலி மற்றும் பொலிவியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.