Trump GuN Shot: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு:
பென்சில்வேனியா பகுதிய்லில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிருஷ்டவசமாக காது பகுதியில் மட்டும் லேசான காயத்துடன் டிரம்ப் உயிர் தப்பினார். குண்டடி பட்டதும் உடனடியாக சுதாரித்துக் கொண்ட டிரம்ப், தனது முன் இருந்த மைக் மேடையின் கீழே குனிந்து தன்னை தற்காத்துக்கொண்டார்.
உடனடியாக பாதுகாவலர்கள் அங்கு விரைந்து டிரம்ப் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து ரத்தம் சொட்ட சொட்ட அவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது டிரம்பிற்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் பைடனுக்கு எதிராக, டிரம்ப் களமிறங்கி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் மீது நடத்தப்பட்டுள்ள இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், முன்னதாக அவர் நடத்திய தாக்குதலில் டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
விசாரணை தீவிரம்:
தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பாக இருக்கிறார் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபருக்கான பிரச்சார பேரணியில் சனிக்கிழமை பென்சில்வேனியாவில் நடந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு அவரைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று அமெரிக்க ரகசிய சேவை பிரிவு தெரிவித்துள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், தகவல்கள் கிடைத்ததும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பில் அலட்சியம்?
டிரம்பின் பரப்புரை நடைபெற்ற பகுதியில் இருந்த ஒரு கட்டடத்தின் மேற்கூரையில் துப்பாக்கியுடன் ஒருவர் நிற்பது குறித்து போலீசாருக்கு தகவல் சொன்னதாகவும், ஆனால் தான் கூறியதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனவும், டிரம்ப் ஆதரவாளர் ஒருவர் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகியுள்ளது.
குவியும் கண்டனங்கள்:
டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிபர் பைடன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பென்சில்வேனியாவில் டொனால்ட் டிரம்பின் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார் என்பதைக் கேட்டதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை. நாம் அனைவரும் ஒரு நாடாக இணைந்து இந்த சம்பவத்தினை கண்டிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”நமது ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு முற்றிலும் இடமில்லை. என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை என்றாலும், முன்னாள் அதிபர் டிரம்ப் பெரிய அளவில் காயமடையவில்லை என்பதில் நாம் அனைவரும் நிம்மதியாக இருக்க வேண்டும். இந்த தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எங்கள் அரசியலில் நாகரீகத்திற்கும் மரியாதைக்கும் நம்மை மீண்டும் அர்ப்பணிக்க, மிஷேலும் நானும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார். உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்கும் டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.