இன்று உலகம் முழுவதும் ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது. உலக ஹோமியோபதி தினத்தையொட்டி 2022 நேற்றும் இன்றும் ஆயுஷ் அமைச்சகம் இரண்டு நாள் அறிவியல் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில், ஹோமியோபதிக்கான தேசிய ஆணையம், தேசிய ஹோமியோபதி கல்விக்கழகம், ஆகிய 3 அமைப்புகளுடன் இணைந்து இந்த மாநாடு நடந்துகொண்டிருக்கிறது. அறிவிக்கப்பட்டபடி புதுதில்லியில் உள்ள பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் கலையரங்கில் இந்த மாநாடு நடைபெறுகிறது. ‘ஹோமியோபதி: நல்வாழ்வுக்கு மக்களின் தேர்வு’ என்று தலைப்பிடப்பட்ட மாநாடு உலக ஹோமியோபதி தினத்தை ஒட்டி நடைபெற்று வருகிறது. 



ஹோமியோபதி தினம் - காரணம்


ஜெர்மனியைச் சேர்ந்த அலோபதி மருத்துவரான டாக்டர் சாமுவேல் ஹானிமன், 1796ஆம் ஆண்டில் கண்டுபிடித்த மருத்துவ முறைதான் ஹோமியோபதி. இவரது பிறந்த தினத்தைதான் உலக ஹோமியோபதி தினமாக ஏப்ரல் 10 ஆம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அல்லோபதி மருத்துவத்தின் பக்கவிளைவுகள் குறித்துப் பெரும் சங்கடம் கொண்டிருந்த டாக்டர் ஹானிமனுக்கு, ஹோமியோபதி மருத்துவம் பெரும் மனநிம்மதியைத் தந்தது. தான் கண்டறிந்த மருந்துகளால் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தினார். 1807-ல் எழுதிய நூலில் தன் மருத்துவ முறையைக் குறிப்பிட ‘ஹோமியோபதி’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மொத்தம் 99 மருந்துகளைக் கண்டறிந்தார். இவற்றை தான் சாப்பிட்டும், நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்தும் சோதித்துப் பார்த்தார். இந்த மருந்துகள், அவற்றின் பண்புகள் குறித்த தொகுப்பு ‘மெட்டீரியா மெடிக்கா’ என்ற நூலாக வெளிவந்தது. விரைவிலேயே உலகம் முழுவதும் இது ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பரவியது. ஹோமியோபதி பள்ளி, கல்லூரி, கிளினிக்குகள் தொடங்கப்பட்டன, ஹோமியோபதிக்கான தத்துவத்தையும் உருவாக்கினர். இவரது நூல்கள்தான் ஹோமியோபதி மருத்துவத்துக்கான அடிப்படையாக அமைந்துள்ளது. தனி மனிதனாக சுமார் 53 ஆண்டுகாலம் பாடுபட்டு, ‘ஹோமியோபதி’ என்ற புதிய மருத்துவ முறையை உலகுக்கு வழங்கிய சாமுவேல் ஹானிமன் 88-வது வயதில் (1843) மறைந்தார். இவரது 267 வது பிறந்தநாள் ஆன இன்று உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது.



ஹோமியோபதி என்றால் என்ன?


ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர் என்பது போலவே, ஒவ்வொரு மனிதருக்கு வரும் நோயும், அதன் காரணங்களும் தனியானவை. ஒருவருக்குத் தலைவலி வருகிறதென்றால், அதற்கு ஒற்றைப் பொது மருந்து கிடையாது என்பதே ஹோமியோபதி காட்டும் வழிமுறை. ஒவ்வொரு உயிரும், அதற்கே உரிய பிரத்யேக உயிர்சக்தியால் கட்டுப்படுத்தப்படவும் நிர்வகிக்கவும் படுகிறது என்பதை உலகுக்கு முதலில் சொன்னவர் டாக்டர் ஹானிமன். அதாவது “ஒத்தது ஒத்ததைக் குணப்படுத்தும்” (Likes are cured by likes) என்பது தான் ஹோமியோபதியின் அடிப்படை தத்துவம்.


எதற்காக ஹோமியோபதி தினம்?


ஹோமியோபதி மருத்துவத்தின் பயன்பாட்டை விரிவுப்படுத்துவதும், பொதுமக்கள் இதனை ஏற்கச் செய்வதும் இந்த தினத்தின் நோக்கங்களாகும். இந்த வருடம் போன்றே எல்லா வருடமும் வழக்கமாக இந்த தினத்தில் ஹோமியோபதி அறிவியல் மாநாடு ஒன்றை இந்தியா நிகழ்த்தும். ஹோமியோபதி துறையில் இதுவரை கடந்த வந்த பாதையையும், சாதனைகளையும் ஆய்வு செய்யும் வாய்ப்பாக இந்த மாநாடு அமையும். அத்துடன் ஹோமியோபதி வளர்ச்சிக்கான எதிர்கால உத்திகள் வகுத்தலும் இதன் நோக்கமாகும். மேலும், மக்களின் நல்வாழ்வுக்கான முதல் தேர்வாக ஹோமியோபதியை முன்னேற்றுவதற்குத் தேவையான கருத்துக்களும், இதில் விவாதிக்கப்படும்.