பிரிட்டனில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்டிருந்த நிலையில் அது தற்போது உலகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


சுகாதார அவசர நிலை


இந்நிலையில், குரங்கு அம்மை நோயை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கலாமா என்பது குறித்து உலக சுகாதார மையம் ஆலோசித்து வருவதாக தகவல் வந்துள்ளது. 


 






மேலும் இதுகுறித்து இன்று (ஜூன் 14) செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம்,  "குரங்கு அம்மை நோய் பரவல் அசாதாரணமானதாகவும் கவலைக்குரியதாகவும் உள்ளது.  சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையை அறிவிக்கும் அளவுக்கு இதன் பாதிப்புகள் உள்ளதா என்பதை மதிப்பிட அவசர கமிட்டியை கூட்ட முடிவு செய்துள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார்.


குரங்கு அம்மை பாதிப்புகள்


முதலில் ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்ற நாடுகளில் பாதிப்பு திடீரென அதிகரித்துவருகிறது. 




கொரோனா பெருந்தொற்றே இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது பரவி வரும் குரங்கு அம்மை இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், மருத்துவக் கழிவுகள் மூலமும், நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளிலிருந்தும் மனிதர்களுக்கு பரவும் என்பதால் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


முன்னதாக குரங்கு அம்மை கரோனா போன்று உலக அளவில் பெருந்தொற்றாக மாறும் வாய்ப்பு இல்லை என்றும் குரங்கு அம்மை நோய் என்பது சர்வதேசப் பரவல் என்பதை நம்ப வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் கோரி இருந்தது.


உயிரிழப்பு இதுவரை இல்லை


குரங்கம்மைத் தொற்று நோயினால் உலகம் முழுவதும் 400க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. எனினும், குரங்கம்மை நோய் என்பது தொற்று நோய் என்பதால் சர்வதேச நாடுகள் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.


மக்கள் கவலைப்படும் அளவுக்கு குரங்கம்மை வேகமாகப் பரவும் நோயல்ல என்றாலும் மெதுவாக இது சமூகப் பரவலாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தயாராக வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியிருந்தது.