பிலிப்பைன்ஸில் கரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதிலிருந்து பேய் தொடர்பான அமானுஷ்ய சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதாகவும் எனவே பேயை ஓட்டும் வகையிலும் பாதிரியார்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கிலும் பேய் ஓட்டும் மையத்தை கத்தோலிக்க தேவாலயம் அமைத்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆசியாவில் இம்மாதிரியான பேய் ஓட்டும் மையம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை. மணிலாவில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுவரும் புனித மைக்கேல் ஆன்மீக விடுதலை மற்றும் பேயோட்டுதல் மையத்தில் சடங்குகள் நடத்தப்படவுள்ளது.
இந்த மையத்தில் தேவாலயத்தை தவிர்த்து ஆலோசனைக்கு என அறை, பேயோட்டுதலுக்கு என தனி அறை நேர்காணலுக்கான அறைகள் ஆகியவை அமைக்கப்படவுள்ளது. மணிலா பேராயர் பேயோட்டுதல் அலுவலகத்தின் இயக்குநரான பாதிரியார் ஜோஸ் பிரான்சிஸ்கோ சைக்வியாவிடம் நாள் ஒன்றுக்கு குறைந்தது 10 அமானுஷ்ய சம்பவங்கள் குறித்து புகார் வருவதாகக் கூறப்படுகிறது. இவர், தலைமை பேயோட்டுபவராத இங்கு பணியாற்றி வருகிறார்.
மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொரோனா அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என தேவாலயம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மணிலா பேராயர் பேயோட்டுதல் அலுவலகம் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், "கடந்த ஏழு ஆண்டுகால பிரார்த்தனை, திட்டம் வகுத்தல், நிதி திரட்டல் ஆகியவற்றின் விளைவாக, ஆசியாவில் முதல் பேயோட்டும் மையம் அமைக்கப்படவுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மணிலா மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. மேலும் இங்கு உலகம் முழுவதிலுமிருந்து வரும் கத்தோலிக்க பாதிரியார்களுக்கு பயிற்சி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பாதிரியார் சைக்வியா கூறுகையில், "பிசாசின் கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு, அதாவது ஏழைகளில் மிகவும் ஏழ்மையானவர்கள், பொதுவாக கவனிக்கப்படாமல் இருப்பவர்களுக்கு மையம் சார்பில் உதவி அளிக்கப்படும்" என்றார்.
தீவிர பயிற்சி, பிஷப்பின் ஒப்புதலுக்குப் பிறகுதான் பேயோட்டுவதற்கு பாதிரியார்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு வாடிகன் முதன்முதலில் பேயோட்டுதல் பற்றிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பிரேசில் மற்றும் மெக்சிகோவிற்கு அடுத்தபடியாக, பிலிப்பைன்ஸில்தான் கத்தோலிக்கர்களின் மக்கள் தொகை அதிகம்.
உலகில் பல பகுத்தறிவாளர்கள் தோன்றினாலும் இம்மாதிரியான பிற்போக்கான செயல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. என்னதான், கல்வி அறிவு அதிகரித்தாலும் இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தாதவரை மூட நம்பிக்கைகள் அதிகரிக்கதான் செய்யும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்