உலக சுகாதார தினமானது ஆண்டுதோறும் ஏப்ரல் 7 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் மக்களைப் பெருமளவில் தாக்கும் ஒரு நோயின் மீது கவனத்தை ஈர்க்க இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மேலும், உலக சுகாதார நாளானது உலக சுகாதார அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட நாளையும் நினைவுகூர்கிற வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட 75வது ஆண்டு ஆகும்.


உலக சுகாதார நாள் 2023ன் கருப்பொருள் என்ன?


ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நாள் கொண்டாட ஒரு கருப்பொருள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "Health For All" அனைவருக்கு சுகாதாரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருப்பொருளின் இலக்கு என்னவென்றால், கடந்த 70 ஆண்டுகளில் பொது சுகாதாரத்தைப் பேணுவதில் செய்யப்பட்ட சாதனைகளை நினைவுகூர்வது. பொது சுகாதாரப் பணிகள் எப்படி கடந்த 70 ஆண்டுகளில் மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது என்பதை அறிவது.


எப்படி கடைபிடிப்பது:


உலக சுகாதார நிறுவனம் இந்த நாளை எப்படிக் கடைபிடிப்பது என்பதற்கும் சில வழிவகைகளை பரிந்துரைத்துள்ளது.உலக சுகாதார தினத்தைக் கொண்டாடும் வகையில் சிறு சிறு அளவில் நிகழ்ச்சிகளை நடத்தலாம். சுகாதார ஊழியர்கள், இன்ஃப்ளூயன்சர்களைக் கொண்டு மக்கள் தங்களுக்காக சுகாதார உரிமையைப் பெறுவதற்கான வழிவகைகளை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அனைவருக்கும் சுகாதாரம் என்ற கருப்பொருளை மக்களிடம் கொண்டு சேர்க்க கலைஞர்களுடன் கைகோத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தலாம். பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத்தியில் அன்றாட சுகாதாரப் பழக்கவழக்கங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம். #HealthForAll, #WHO75 ஹேஷ்டேகுகளைப் பயன்படுத்தி சமூக ஊடக பிரச்சாரங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


உலக சுகாதார அமைப்பு: வரலாறு


உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்யும் அதிகாரம் படைத்தது. ஏப்ரல் 7, 1948ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின் முன்னோடியான லீக் ஆப் நேஷன்ஸ் என்கின்ற அமைப்பு இருந்தபோது இருந்த சுகாதார அமைப்பின் வழிவந்ததாகும்.


"உலகில் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக்கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்".இதன் முக்கிய வேலைத்திட்டமாக தொற்றுநோய்கள் போன்ற நோய்நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்களனைவருக்கும் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும்.


நாம் வாழும் காலத்தில் கொரோனா என்ற பெருந்தொற்றை சந்தித்துவிட்டோம். அதே வேளையில் உலக சுகாதார அமைப்பின் முக்கியத்துவத்தையும் பங்களிப்பையும் கூடவே அறிந்தோம். ஆரம்பத்தில் இந்த வைரஸ் எந்த நாட்டில் உருமாறுகிறது அந்த நாட்டின் பெயரில் அழைக்கப்பட்டது. அப்போது நாடுகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டபோது உலக சுகாதார அமைப்பு தலையிட்டு கொரோனா வைரஸ் திரிபுகளுக்கு ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, ஓமிக்ரான் எனப் பெயரிட்டது. பொது சுகாதாரத்தோடு அமைதியையும் பேணும் வேலையயும் இந்த அமைப்பு செய்துள்ளது. இப்போது இந்த அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதானோம்  கேப்ரியேஸஸ் இருக்கிறார்.