தொடா்ந்து 6ஆவது ஆண்டாக, உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையைத் பெற்றுள்ளது ஃபின்லாந்து. இந்தப் பட்டியலில் இந்தியா 125ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.


மகிழ்ச்சியான நாடுகள்:


கால்அப் வேர்ல்ட் போல் நிறுவனம் சேகரித்த தரவுகளின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட பட்டியலில், நோர்டிக் நாடுகள் முன்னணி இடங்களை பிடித்துள்ளன.


இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும் மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்து இடம் பிடித்துள்ளன. கடந்த ஆண்டும், இந்த நாடுகள்தான் முன்னணி இடத்தை பிடித்திருந்தன.


பொதுவாக, தனிப்பட்ட ரீதியான அமைப்பு ரீதியான அதிக நம்பக்கை மிகுந்த நாடுகளாக உள்ள நோர்டிக் நாடுகள் இந்த முறையும் அதில் அதிக மதிப்பெண் பெற்று கவனம் பெற்றுள்ளது. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிக கொரோனா இறப்புகள் பதிவான மேற்கு ஐரோப்பியாவை ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு இறப்புகளே நோர்டிக் நாடுகளில் பதிவாகியுள்ளன. 


அடிமட்டத்தில் இந்தியா:


ஆசிய நாடுகளை பொறுத்தவரையில், 137 நாடுகள் கொண்ட பட்டியலில் 125ஆவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தியாவை விட மற்ற ஆசிய நாடுகளான நேபாளம், சீனா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகள், அதிக மிகழ்ச்சியுடன் இருப்பதுதான். ஆப்கானிஸ்தான், 137ஆவது இடத்தை பிடித்துள்ளது.


சா்வதேச மகிழ்ச்சி நாள் ஆண்டுதோறும் மாா்ச் 20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐ.நா. நீடித்த வளா்ச்சிக்கான தீா்வுகள் அமைப்பு இன்று வெளியிட்டது. தொடா்ந்து 11ஆவது ஆண்டாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த மூன்று ஆண்டுகளில் கிடைத்த தரவுகளின் சராசரியை அடிப்படையாக கொண்டு 150 நாடுகளில் இருந்து தரவு எடுக்கப்பட்டு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.


எதன் அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டது?


மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. கணக்கெடுப்பின்போது மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிா்ணயிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), ஆயுள்காலம், வாழ்வில் முடிவெடுப்பதற்கான சுதந்திரம், சமூக ஆதரவு, ஊழலற்றத்தன்மை உள்ளிட்டவை தொடா்பாக ஆராயப்பட்டது. இதன் அடிப்படையில், எந்த நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பது கணக்கெடுக்கப்பட்டது.


கரோனா தொற்று பரவல் காலத்தில் நாடுகள் தங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டன, மக்களின் நலன் குறித்து நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டின் பட்டியலில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், குறிப்பாக சுவாரஸ்யமாகவும் மனதைத் தூண்டும் வகையில் அமைந்திருப்பது சமூக சார்புடன் தொடர்புடையது.


இரண்டாவது ஆண்டாக, அந்நியருக்கு உதவுதல், தொண்டுக்கு நன்கொடை அளிப்பது மற்றும் தன்னார்வத் தொண்டு செய்வது போன்ற பல்வேறு வகையான அன்றாட செயல்கள் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு அதிகமாக உள்ளது.