உலக ஈமோஜி தினம் இன்று!
இன்று மொபைல் குறுஞ்செய்திகளில் வார்த்தைகளின் எண்ணிக்கையை விட ஈமோஜிகள் தான் அதிகம் இடம் பெறுகின்றன. வார்த்தைகளால் வெறும் செய்தியை மட்டுமே பதிவு செய்ய முடியும். ஈமோஜிகள் வழியே உணர்வுகளையும் பதிவு செய்யலாம்.சிரிப்பு, அழுகை, கொண்டாட்டம், பணிவு, பாராட்டு, வணக்கம், நன்றி என அனைத்திற்குமே ஈமோஜிகள் உள்ளன.ஒவ்வொரு வகைச் சிரிப்பிற்கும் தனித்தனி ஈமோஜிகள் இருக்கின்றன.
ஈமோஜிகளின் வரலாறு :
இன்டர்நெட் உலகில் கொடி கட்டி பறக்கும் ஈமோஜிகள், தோற்றுவித்த இடம் ஜப்பான். சிகேடகா குரிடா என்ற டிசைனர் தான் ஈமோஜிகளை உருவாக்கினார். ஜப்பானை சேர்ந்த மொபைல் கம்பெனியான என் டி டி டொகோமோ கம்பெனி தான், இதனை முதன்முதலில் வெளியிட்டது. முதலில் முக பாவனைகளை மட்டுமே ஈமோஜிகள் மூலம் அறிமுகம் செய்திந்திருந்த நிலையில், தற்போது நவீன கால தொழில்நுட்பம் மற்றும் நாகரிக வளர்ச்சிக்கேற்ப விலங்குகள், பழங்கள், பொருட்கள் என அனைத்திற்கும் ஈமோஜிகள் வந்துவிட்டது. ஆப்பிள்,ஆண்ட்ராய்டு என ஒவ்வொரு நிறுவனங்களும் ஈமோஜி அப்டேட் கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர்.சமீபத்தில் ஆப்பிள் அப்டேட்டில் ஆண்கள் கர்ப்பமானதை போல் ஈமோஜி ஒன்று வெளியிடப்பட்டு வைரலாகி இருந்தது. இதற்கு பல தரப்பினரிடம் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. 2021 ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பின்படி மொத்தம் 3,633 ஈமோஜிகள் இருக்கின்றன.
வார்த்தையா? ஈமோஜியா?
ஒரு சிச்சுவேசனுக்கு ஏற்ப நான் சிரிக்கிறேன் நான் அழுகிறேன் என்று நம் உணர்வுகளை கூறுவதற்கு வார்த்தைகள் கிடையாது. ஆனால் தற்போது ஒரே ஒரு ஈமோஜியில் நம் உணர்வுகளை பிறருக்குச் சொல்லிவிடலாம். ஆதிகால மனிதன் வரைபடங்கள் வாயிலாக தான் தகவல்களை பரிமாறிக் கொண்டான். இன்று மீண்டும் அதே நிலை திரும்பியுள்ளது.எனினும் ஈமோஜிகள் வார்த்தைகளை மிஞ்சி விடுமா என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. இரண்டிற்கும் தனித்தனி சிறப்புகள் உள்ளன. ஜப்பானிய மொழியில் எழுத்து மற்றும் படம் ஆகிய இரண்டு வார்த்தைகளின் கலவையே ஈமோஜி என்ற வார்த்தை. ஆக வார்த்தையா? ஈமோஜியா? என்ற குழப்பம் தேவையே இல்லை. இரண்டும் ஒன்று சேர்ந்ததே ஈமோஜி. வரைபடங்களின் விளக்கமாக வார்த்தைகளும்; வார்த்தைகளின் சுருக்கமாக ஈமோஜிகளும் இன்று பயன்படுகின்றன.
இன்று காதல் ஜோடிகள், நண்பர்கள் ஏன் அலுவலக வாட்ஸப் சேட்களில் கூட இமோஜிகள் தான் வலம் வருகின்றன. வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த தயங்கும் சில உணர்வுகளை ஈமோஜிகள் மூலம் மக்கள் மிகச் சுலபமாக சொல்லி விடுகின்றனர். இந்த ஈமோஜிகள் மூலம் காதலை வெளிப்படுத்திய காதல் ஜோடிகள் அதிகம். இன்றைய பரபரப்பான உலகத்தில் நேரம் என்பது மிகப்பெரிய பொக்கிஷம். அந்த நேரத்தைக் காக்கும் வகையில், தகவல் பரிமாற்ற நேரத்தை குறைத்து வேலையை எளிதாக்கி விடுகின்றன ஈமோஜிகள்.