2019 தொடங்கி இன்றுவரை உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்துவது தொடர்பாக 2015-ஆம் ஆண்டிலேயே சீன விஞ்ஞானிகள் ஆலோசனை நடத்தியதாக ஓர் அதிர்ச்சி தரும் அறிக்கை வெளியாகியிருக்கிறது. 'வீக்கெண்ட் ஆஸ்திரேலியா' என்ற ஆஸ்திரேலிய நாட்டு ஊடகம் ஒன்று இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது.

 

2015-இல் சீன விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆலோசனை தொடர்பான ஆவணத்தில், "சார்ஸ் கொரோனா வைரஸ்களை புதிய யுகத்தின் உயிரி ஆயுதமாகப் பயன்படுத்தலாம். இதனால் செயற்கையாக மனித குலத்திற்கு எதிராக நோயை உண்டாக்கலாம். பின்னர் அதையே வலுவான ஆயுதமாகப் பயன்படுத்தலாம் " என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. சீனர்கள் மூன்றாம் உலகப் போரை உயிரி ஆயுதங்களைக் கொண்டு நடத்த முடியுமா என்ற பரிசோதனை மேற்கொண்டிருக்கின்றனர். சீன ராணுவ விஞ்ஞானிகள் இதுதொடர்பான ஆலோசனை, முன்னெடுப்புகளை ஐந்தாண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டனர் என்பதை இந்த ஆவணம் உலகுக்கு உறுதிபட வலியுறுத்துவதாக அமைந்திருக்கிறது என்ற விவாதம் கிளம்பியுள்ளது.

 


 

'தி அன்னேச்சுரல் ஆரிஜின் ஆஃப் சார்ஸ்' ( The Unnatural Origin of SARS and New Species of Man-Made Viruses as Genetic Bioweapons) என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

’வீக்கெண்ட் ஆஸ்திரேலியா’ வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் news.com.au. இணையதளத்திலும் வெளியாகியிருக்கின்றன.

இது குறித்து, ஆஸ்திரேலியாவின் வெளியுறவு கொள்கை மையத்தின் (ASPI) நிர்வாக இயக்குநர் பீட்டர் ஜென்னிங்ஸ் கூறுகையில், "கொரோனா வைரஸ் தொடர்பாக சீனா மீது சந்தேகக் கண்கள் இருக்கும் நிலையில் புகையும் விஷயத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அறிக்கை கிடைத்திருக்கிறது. இந்த அறிக்கை, சீன விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் வெவ்வேறு வகைகளை ராணுவத்தில் பயன்படுத்த முடிவு செய்திருந்ததை உறுதி செய்திருக்கிறது. ராணுவப் பயன்பாட்டுக்கு வைத்திருந்த வைரஸானது ஒரு விபத்தாக வெளியேறியிருக்க வாய்ப்பிருக்கிறது என்ற வாதத்தையும் வலுப்படுத்துகிறது. மேலும், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக வெளியிலிருந்து யாரேனும் புலன் விசாரணைகள்  மேற்கொள்ள சீனா ஏன் இத்தனை சுணக்கம் காட்டுகிறது என்பதன் பின்னணியும் வெட்டவெளிச்சமாக்குகிறது" என்றார்.

 

ஆஸ்திரேலியாவின் சைபர் பாதுகாப்பு நிபுணர் ராபர்ட் பாட்டர், கசிந்த சீன ஆவணத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட நிலையில், அவரும் நிச்சயமாக இந்த அறிக்கை போலியானது இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ராபர்ட் பாட்டர் கூறுகையில், "இந்த ஆவணம் நிச்சயம் போலியானது அல்ல. ஆனால், இது எவ்வளவு முக்கியமானது என்பதை வெளியிலிருந்து வேறேதும் அரசியல் நிபுணர்களே கூற வேண்டும். விஷயம் கசிந்துவிட்டதால் மூல ஆவணங்களை அழிக்க சீனா நிச்சயமாக முற்படும் என்றார். சார்ஸ்-கோ-வி-2 (SARS-Co V-2) என்ற வைரஸ் டிசம்பர் 2019-ஆம் ஆண்டில் உலகை அச்சுறுத்தத் தொடங்கியது இன்று உலகம் முழுவதும் 15 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்திய அளவில் 2.2 கோடி பேருக்கு கொரோன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட தேசமாக இந்தியா இருக்கிறது. இந்நிலையில், சீனாவை அம்பலப்படுத்தும் இந்த அறிக்கை உலகரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸை 'சீன வைரஸ்' என்றே அழைத்துவந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பின்னர் உலக சுகாதார நிறுவனம் போன்ற அமைப்புகளின் கண்டனத்தையடுத்து அவ்வாறு அழைப்பதை அவர் தவிர்த்தார்.