பாகிஸ்தானில் நிகழும் அரசியல் மாற்றங்கள், இந்தியாவில் எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அண்டை நாடு என்பதாலும் வரலாற்று ரீதியாகவும் முக்கியமான நாடு என்பதால், அங்கு நிகழும் அரசியல் மாற்றங்களுக்கு இந்தியா எப்போதும் முக்கியத்துவம் தரும். அந்த வகையில் வரும் ஜனவரி மாதம், அங்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலை:
மோசமான பொருளாதார நிலையும் நிலையற்ற அரசியல் சூழலும் பாகிஸ்தானுக்கு பெரும் நெருக்கடியை தந்து வருகிறது. எனவே, வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள தேர்தல், அந்நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் பொருளாதார நிலை குறித்து உலக வங்கி பரபரப்பு தகவல்களை பகிர்ந்துள்ளது. மோசமான பொருளாதார சூழல்களால் பாகிஸ்தானின் வறுமை 39.4 சதவிகதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்கும்படி வரவிருக்கும் அரசாங்கத்தை உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.
"12.5 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர்"
"பாகிஸ்தானின் வறுமை ஒரு வருடத்திற்குள் 34.2 சதவிகிதத்தில் இருந்து 39.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும், 12.5 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். ஒரு நாளுக்கு 3.65 டாலர்களுக்கு குறைவாக வருமானம் பெறுகின்றனர். சுமார் 9.5 கோடி பாகிஸ்தானியர்கள் இப்போது வறுமையில் வாழ்கின்றனர்" என உலக வங்கி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கான உலக வங்கியின் முன்னணி பொருளாதார நிபுணர் டோபியாஸ் ஹக், இதுகுறித்து கூறுகையில், "பாகிஸ்தானின் பொருளாதார மாதிரி இனி வறுமையைக் குறைக்காது. வாழ்க்கைத் தரம் சக நாடுகளுக்குப் பின்னால் வீழ்ச்சியடைந்துள்ளது. பாகிஸ்தானின் இன்றைய பொருளாதார நிலை குறித்து உலக வங்கி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார மற்றும் மனித வள நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. மேலும் பெரிய கொள்கை மாற்றங்கள் தேவைப்படும் கட்டத்தில் உள்ளது" என்றார்.
உலக வங்கி யோசனை:
பாகிஸ்தானில் அமைய உள்ள புதிய அரசாங்கத்திற்காக அனைத்து பங்குதாரர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கை குறிப்புகளை உலக வங்கி வெளியிட்டது. அதில், பல முக்கிய யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் மீது அரசு வரி விதிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வீண் செலவுகளைக் குறைக்க வேண்டும் என யோசனை வழங்கப்பட்டுள்ளது.
மனித வளம், நிலையில்லாத நிதி நிலைமை, அதிக ஒழுங்குபடுத்தப்பட்ட தனியார் துறை, விவசாயம், எரிசக்தி ஆகிய துறைகளில் புதிய அரசாங்கம் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என உலக வங்கி வலியுறுத்தியுள்ளது. வரி - மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை உடனடியாக 5% அதிகரிக்கவும் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் செலவினங்களை 2.7% குறைக்கவும் உலக வங்கி யோசனை வழங்கியுள்ளது.