ஒன்பது நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் செவ்வாய்கிழமை, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார். இந்திய - கனடா நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜெய்சங்கரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


"இரட்டை நிலைபாடுகளை கொண்ட உலகமாக உள்ளது"


இந்த நிலையில், 'உலகளாவிய தெற்கின் எழுச்சி: கூட்டணி, நிறுவனங்கள், கருத்தாக்கங்கள்' என்ற தலைப்பில் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் என்ற ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். ஐக்கிய நாடுகளுக்கான இந்திய தூதரகம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆதிக்க நாடுகளை கடுமையாக சாடினார்.


"இது இன்னுமும் இரட்டை நிலைபாடுகளை கொண்ட உலகமாக உள்ளது. செல்வாக்கு மிக்க நாடுகள் மாற்றத்தை எதிர்க்கின்றன. வரலாற்று ரீதியாக செல்வாக்கு மிக்க நாடுகள், தனது திறன்களை ஆயுதமாக்கியுள்ளன. அரசியல் விருப்பத்தை விட, மாற்றத்திற்கான அரசியல் அழுத்தம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.


உலகில் ஒரு உணர்வு வளர்ந்து வருகிறது. அதன் பிரதிபலிப்பாக உலகளாவிய தெற்கு உள்ளது. ஆனால் அதற்கு அரசியல் எதிர்ப்பும் உள்ளது. செல்வாக்கு மிக்க நாடுகள், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அதைப் பார்க்கிறோம், எல்லாவற்றிற்கும் மேலாக, அவை மாற்றத்திற்கான அழுத்தத்தை எதிர்க்கின்றன.


இன்று பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்துபவர்கள் தங்கள் உற்பத்தித் திறனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அமைப்பு ரீதியாக செல்வாக்கு மிக்க நாடுகள் அல்லது வரலாற்று ரீதியாக செல்வாக்கு மிக்கவர்கள் உண்மையில் அந்தத் திறன்களையும் ஆயுதமாக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் சரியான விஷயங்களைச் சொல்வார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் இது இன்னமும் இரட்டை நிலைபாடு கொண்ட உலகமாக உள்ளது.


"உலகளாவிய தெற்கே சர்வதேச அமைப்பின் மீது மேலும் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும்"


கொரோனா பெருந்தொற்றே அதற்கு ஒரு உதாரணம். ஆனால், இந்த முழு மாற்றமும் எப்படி இருக்கும் என்றால் உலகளாவிய தெற்கே சர்வதேச அமைப்பின் மீது மேலும் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். வடக்கில் இருப்பது போன்று உணராத நாடுகள் கூட மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.


கலாச்சார மறுசீரமைப்பு என்பது உண்மையில் உலகின் பன்முகத்தன்மையை அங்கீகரிப்பது. உலகின் பன்முகத்தன்மையை மதிப்பது. பிற கலாச்சாரங்கள் மற்றும் பிற மரபுகளுக்கு உரிய மரியாதையை வழங்குவதாகும். மற்றவர்களின் பாரம்பரியம், மரபு, இசை, இலக்கியம் மற்றும் வாழ்க்கை முறைகளை மதிப்பது, இது உலகளாவிய தெற்கு விரும்பும் மாற்றத்தின் ஒரு பகுதியாகும்" என்றார்.


இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் போர்ச்சுகல் வெளியுறவு அமைச்சர் ஜோவா கோம்ஸ் க்ராவின்ஹோ, ஜமைக்காவின் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் கமினா ஜான்சன் ஸ்மித் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.