பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள் ஆனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்கள் முகத்தை மறைக்கும் நிகாப், உடல் முழுவதையும் மறைக்கும் புர்கா அணிந்தே செல்ல வேண்டும் என்று கெடுபிடி விதித்துள்ளனர் தலிபான்கள். ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் அங்கு இன்னும் முறைப்படி ஆட்சி அமையவில்லை.
தலிபான்கள் ஆட்சி 1990-களில் இருந்ததுபோல் கெடுபிடி நிறைந்ததாக இருக்கும் என அஞ்சி ஏற்கெனவே 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆப்கனில் இருந்து வெளியேறிவிட்டனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் நாங்கள் இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு ஆட்சி நடத்துவோம். முன்புபோல் எங்களின் ஆட்சி இருக்காது என்றெல்லாம் தலிபான்கள் உறுதியளித்தனர். பெண் கல்விக்கு தடையில்லை என்றே அவர்கள் அரசைக் கைப்பற்றிய நாளில் இருந்தே கூறிவருகின்றனர்.
இருப்பினும் பெண் கல்விக்கு அவர்கள் பல்வேறு நிபந்தனைகளை அறிவித்துள்ளனர். அதன்படி பெண்கள் முழுமையாக உடலையும், முகத்தையும் மறைக்கும் வகையில் நிக்காப், புர்கா அணிய வேண்டும் என்று அவர்கள் கெடுபிடி விதித்துள்ளனர். அதேபோல் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு பெண் ஆசிரியர்களே பயிற்றுவிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் சில பாடப்பிரிவுகளில் மட்டும் விதிவிலக்காக ஆண் ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதுவும் அவர்கள் வயதில் மூத்தவர்களாக, நல்ல நடத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். அவர்களுடைய பணிகளில் வரலாறு எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது, பள்ளி, கல்லூரிகளில் இருந்து வகுப்புகள் முடிந்து மாணவிகள் முதலில் வெளியேற வேண்டும். அவர்கள் வெளியேறிய பின்னர் 5 நிமிடங்களுக்குப் பின்னரே மாணவர்கள் வெளியே வர வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் பெண் பேராசிரியர்களை மட்டுமே பாடம் நடத்துவது நடமுறை சாத்தியமற்றது. பெண் பேராசிரியர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக உள்ளது என்று பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் பெயர் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார். முந்தைய ஆட்சியில் தலிபான்கள் பெண் கல்விக்கு அனுமதியளிக்கவே இல்லை. பெண்கள் ஆண் துணை இல்லாமல் வெளியே வந்தால் அடித்துத் துன்புறுத்தினர். ஏன் படுகொலை கூட செய்திருக்கின்றனர். ஆனால், இப்போது குறைந்தபட்சம் கல்வி கற்கவாவது அனுமதியளித்துள்ளனரே என்று அந்நாட்டுப் பெண்கள் சிறு ஆறுதல் அடைந்துள்ளனர்.
அதேபோல் பெண்கள் செவிலியராகப் பணியாற்றத் தடையில்லை என்றும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். பெண்களை நிச்சயமாக அமைச்சர்களாக்க மாட்டோம் என்று தலிபான்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர். ஆனால், பெண்கள் அங்கு முந்தைய காலம் போல் இல்லாமல் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். கடந்த வாரம் பெண்கள் காபூல், ஹெராத் நகரங்களில் பேரணியாகச் சென்றனர். நாங்கள் 1990-களில் இருந்தவர்கள் அல்ல, எங்களை மிரட்ட வேண்டாம் என்று கோஷமிட்டபடி அவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தலிபான்களால் தாக்கப்பட்டனர்.
கல்வி கற்கும் பெண் குரல்கள் நிச்சயம் ஒலிக்கும்..