இலங்கை ஒரு முக்கியமான சிக்கலில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி பொருளாதார நெருக்கடியை பிரகடனம் செய்தது இலங்கை அரசு. அதாவது உணவு பொருட்கள் பொருட்களுக்கு உச்ச வரம்பை நிர்ணயம் செய்ததது. பணவீக்கத்தை குறைப்பது இதன் முக்கிய நோக்கமாகும். ஆனால் பல சிக்கல்கள் அங்கு நிலவுவதாக தெரிகிறது. இலங்கை தீவு உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு. உணவுப்பொருள் மட்டுமல்லாமல் மருந்துகள், எரிபொருள் உள்ளிட்டவற்றையும் இறக்குமதி செய்ய வேண்டும்.




இலங்கையின் முக்கியமான ஏற்றுமதி தேயிலை. இருந்தாலும் இலங்கையின் மொத்த ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம். இந்த இறக்குமதிக்கு அந்நிய செலாவணியை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும். இதற்கு சுற்றுலாவை நம்பி இருந்தது இலங்கை. ஆனால் கோவிட் காரணமாக சுற்றுலாவும் சரியில்லை என்பதால் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே இருந்தது. இதனால் டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே இருந்தது. 2019-ஆம் ஆண்டு இலங்கை ஜிடிபியில் 10 சதவிகிதம் அளவுக்கு சுற்றுலாவின் பங்கு இருந்தது.


நடப்பு ஆண்டில் மட்டுமே 7.5 சதவிகிதம் அளவுக்கு இலங்கை ரூபாய் மதிப்பு சரிந்தது. இதனால் உணவுப்பொருளை இறக்குமதி செய்வதற்குக் கூட கூடுதல் தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. 2019-ஆம் ஆண்டு நவம்பரில் 750 பில்லியன் டாலர் அளவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு இருந்தது. ஆனால் கடந்த ஜூலையில் 280 டாலர் அளவுக்குக் கையிருப்பு குறைந்தது. இதில் இலங்கையின் மொத்த கடன் 8600 கோடி டாலர் ஒருபக்கம்.




இதனால் கடந்த மார்ச் முதலே வாகனங்கள், மஞ்சள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தடை விதித்திருக்கிறது. ( சில மாதத்துக்கு முன்பு மஞ்சளை இந்தியாவில் இருந்து முறைகேடாக கடத்தியது குறித்த செய்திகள் நினைவிருக்கலாம்)


மேலும் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்புவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் வெளிநாடுகளில் படிப்பவர்கள் அல்லது இதர பொருட்களை இறக்குமதி செய்பவர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தவிர விலை கட்டுப்பாடுகள் இருப்பதால் இறக்குமதி செய்வதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. விலை கட்டுப்பாடுகள் இருப்பதால் சிறு கடை வைத்திருப்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. மொத்த விலையில் எங்களுக்கு கிடைக்கும் பொருட்களை சிறிதளவு லாபம் சேர்த்து விற்கிறோம். தற்போது லாபம் இல்லாத சூழலில் ஏன் வியாபாரம் செய்யவேண்டும் என கடை உரிமையாளர்கள் கேட்கிறார்கள்.


ஆனால் இலங்கையில் உணவுப்பொருட்கள் பற்றாக்குறை இருக்கிறது என்னும் செய்தியை இலங்கை அரசு மறுத்திருக்கிறது.


ஆர்கானிக் விவசாயம் காரணமா?


இலங்கை அரசு 100 சதவிகிதம் ஆர்கானிக் விவசாயம் என்னும் முறைக்கு மாறியது. இதனால் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு இலங்கை அரசு தடை செய்திருக்கிறது. இதனால் இயற்கை முறையில் விவசாயம் செய்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் தேயிலை ஏற்றுமதி ஆண்டுக்கு 125 கோடி டாலர். இலங்கை மொத்த ஏற்றுமதி வருமானத்தில் தேயிலையின் பங்கு 10 சதவிகிதம்.


இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தேயிலை உற்பத்தி பாதியாக குறைந்திருக்கிறது. ஆனால் பாதியாக குறைந்தாலும் அதற்கு ஏற்ப விலை கிடைக்காது என்று தேயிலை விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள். தேயிலையை நம்பி 30 லட்சம் பணியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது என்றும் தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.


2012-ஆம் ஆண்டு முதல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில் ஆர்கானிக் விவசாயத்தை தேர்ந்தெடுத்தது சிக்கலை மேலும் பெரிதாக்கியது. கோவிட் காரணமாக சுற்றுலா வருமானம் குறைந்தது. இதனால் அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்தது. இது பணவீக்கத்தை அதிகரித்தது. கூடுதல் இணைப்பாக ஆர்கானிக் விவசாயத்துக்கு மாறியதால் உற்பத்தி சரிந்தது என பல முனை சிக்கலில் இருக்கிறது இலங்கை. கோவிட் தாக்கம் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி இருக்கிறது.


இலங்கையில், பிரச்சினை இப்போதுதான் தொடங்கி இருக்கிறது