இங்கிலாந்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் ஒரே நாளில் 20 கோடிக்கு அதிபதியான கதை அங்கே பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த நாட்டின் நார்த் அம்பர்லேண்ட் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் ஏலம் விடும் நபரான லேன் மார்க் என்பவரிடம் ஒரு வைரக்கல்லைக் கொடுத்து மதிப்பிடும்படி சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். ‘நான் போகிற வழியில் உங்கள் கடையைப் பார்த்தேன் .அதனால் அப்படியே இந்தக் கல்லை மதிப்பிடக் கொடுக்கலாம் என வந்தேன்’ என அவர் கூறியிருக்கிறார்.
மார்க் மூன்றுநாட்களுக்கு முன்பு அந்தக் கல்லை மதிப்பிட்டதால் ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் திக்குமுக்காடியுள்ளார். காரணம் அது 24 கேரட் மதிப்பைக் கடந்துள்ளது. இதையடுத்து பெல்ஜியத்துக்கு அந்தக் கல்லை அனுப்பி அதன் உண்மை மதிப்பை பரிசோதிக்கச் சொல்லியுள்ளார். அந்தக் கல்லின் மதிப்பு 34 கேரட் எனவும் இந்திய மதிப்பில் சுமார் 20 கோடி இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.
இதில் கூடுதல் சுவாரசியம் என்ன தெரியுமா கல்லை மதிப்பிட வந்த அந்த மூதாட்டிக்கு அதன் உண்மை மதிப்பே தெரியாதாம். கல்லைத் தூக்கியெறிய இருந்தவரை அவரது தோழிதான் அதனை மதிப்பிடக் கொடுக்கும்படி கூறியுள்ளார். சுமார் ஒரு பவுண்ட் நாணயம் அளவில் இந்த டைமண்ட் இருந்ததாக அதனை மதிப்பிட்டவர் கூறியுள்ளார்.
70வயது மூதாட்டி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கார் கெராஜ் விற்பனையில் அவர்கள் விற்ற ஒரு சிறிய பெட்டியை வாங்கியுள்ளார். அந்தப் பெட்டியில் திருமணத்துக்கு உபயோகிக்கும் பேண்ட், மற்றும் சில கவரிங் நகைகளுக்கு நடுவே இந்தக் கல்லும் கிடந்துள்ளது. அந்தக் கல் சாதாரண மதிப்பற்ற கண்ணாடிக் கல் என நினைத்த மூதாட்டி அதனைத் தூக்கியெறிய எண்ணியுள்ளார். அதற்கடுத்துதான் இத்தனையும் நடந்துள்ளது.
ஒரே இரவில் 20 கோடிக்கு அதிபதியான மூதாட்டியை அனைவரும் ஆச்சரியமாகக் கொண்டாடி வருகின்றனர்.