வாடிகனில், கத்தோலிக்கத் தலைவரான போப்பாண்டவர் என அழைக்கப்படும் போப் பிரான்சிஸை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடி போப் பிரான்சிசை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். சந்திப்பின்போது இந்தியாவிற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் பிரதமருடன் சென்றிருந்தனர். போப் உடனான சந்திப்பு 20 நிமிடங்களுக்கு திட்டமிட்டிருந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கு சந்திப்பு நடைபெற்றதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “"போப் பிரான்சிஸுடன் மிகவும் அன்பான சந்திப்பை மேற்கொண்டேன். அவருடன் பலதரப்பட்ட பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அவரை இந்தியாவிற்கு வருமாறும் அழைத்தேன்" என தெரிவித்துள்ளார்.
இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியாவும் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளதால் இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் மரியோ திரகி அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இத்தாலி தலைநகர் ரோம் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்வலஸ் மிக்கேல், ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் ஆகியோரை சந்தித்து பேசினார். தொடர்ந்து கத்தோலிக்கத் தலைவரான போப்பாண்டவரை சந்தித்துப் பேசினார். வறுமை ஒழிப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக ரோமின் பியாகா காந்தி பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.