இத்தாலியில் 22 வயது பெண் ஒருவர் மனித பூனையாக மாறுவதற்காக எடுத்து வரும் முயற்சிகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


காலங்கள் மாறிவிட்ட இந்த சமூகத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டுமென நினைப்பவர்கள் ஏராளம். தலைமுடி தொடங்கி கால் நகங்கள் வரை ஏதாவது செய்து சாதாரண மனிதர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்தி காட்டி சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கிறது. சமூக வலைத்தளங்களும் மக்களுக்கு புதிதாக ஏதாவது ஒன்றை அறிமுகம் செய்துக் கொண்டு தான் இருக்கின்றன. 


பச்சைக்குத்துவது எல்லாம் இப்போது டாட்டூவாக பேஷனாகி போனது. அதேபோல் சமூக வலைத்தளங்களில் லைக்குகளை பெற்று புகழடைய உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் சம்பவங்களிலும் சிலர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் இத்தாலியைச் சேர்ந்த பெண்ணான சியாரா டெல்அபேட் அந்நாட்டின் டிக்டாக் பிரபலமாக உள்ளார். 


22 வயதான இவருக்கு மனித பூனையாக மாற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது. இதற்காக உடலில் 20 இடங்களில் மாற்றங்கள் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பல்வேறு வீடியோக்களை உருவாக்கி டிக்டாக் செயலியிலும் பதிவிட்டுள்ளார். இதனை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். 


உடல் அமைப்பை மாற்ற சியாரா டெல்அபேட் உடலில் துளைகள் போடுவது, பச்சை குத்துவது என பல சிறப்பான சம்பவங்களில் இவர் ஈடுபட்டுள்ளார். கிட்டதட்ட சியாரா டெல்அபேட் உடலில் மட்டும் 72 துளைகள் உள்ளது. இதில் துளையிடப்பட்ட மூக்கு, மேல் உதடு மற்றும் பிளவுப்பட்ட நாக்கு ஆகியவையும் அடங்கும். சியாரா டெல்அபேட் இன்னும் முழுமையான பூனை தோற்றத்துக்கு மாறவில்லை. ஆனால் இப்போது அவர் இருக்கும் நிலைமையை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


முழு பூனையாக தோற்றம் காண இன்னும் நிறைய இருப்பதாக சியாரா டெல்அபேட்  செம கூலாக பதிலளித்துள்ளார். பூனையாக மாற கண்களில் பிரத்யேக அறுவை சிகிச்சை, பற்களில் மாற்றம், வால் போன்ற அமைப்பை இணைத்தல், பச்சை குத்துதல் என அவர் சொல்லும் பட்டியல் கேட்பவர்களுக்கு தலை சுற்றலை ஏற்படுத்தி விடும். இந்த தோற்றம் மாற்றத்தில் உண்டாகும் காயத்தால் ஏற்படும் வழி தனக்கு மிகவும் பழகி விட்டதாகவும் சியாரா டெல்அபேட் தெரிவித்துள்ளார். 


இதற்கான செயல்முறையை தனது 11 வயதில் அவர் தொடங்கியுள்ளார். மேலும் தான் ஒரு  அழகான பூனைப் பெண்ணாக இருப்பேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் உண்மையில் ஒரு கார்ட்டூன் கதாபாத்திரத்தைப் போல தோற்றமளிக்க விரும்பாததால் பூனைப் பெண்ணாக மாற நினைக்கிறேன். நான் எப்பொழுதும் பூனைகளை நேசிக்கிறேன் என சியாரா டெல்அபேட் கூறியுள்ளார்.