ஆஸ்திரியா நாட்டில் காயமடைந்த காலுக்கு பதிலாக தவறுதலாக நல்ல காலை ஆபரேஷன் செய்து அகற்றிய மருத்துவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் பிரீஸ்டாட் நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு சமீபத்தில் 82 வயது முதியவர் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவருக்கு விபத்து காரணமாக காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அந்த காலை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் 43 வயதான மருத்துவர் ஒருவர் அந்த முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்தார். ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காலுக்கு பதிலாக கவனக்குறைவாக நன்றாக இருந்த காலை ஆபரேஷன் மூலம் அகற்றி எடுத்துவிட்டார். அறுவை சிகிச்சைக்கு பின் இரண்டு நாட்களுக்கு பிறகே மருத்துவருக்கு தான் செய்த தவறு தெரிந்துள்ளது. அடுத்த சில நாட்களிலேயே அந்த முதியவர் இறந்து விட்டார்.
இதையடுத்து உயிரிழந்த முதியவரின் மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் உடனடி நிவாரணமாக 4.24 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான மருத்துவர் இது மனித தவறு என வாதிட்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி முதியவரின் மனைவிக்கு மேலும் 2.59 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர் கூறுகையில், “அறுவை சிகிச்சை அரங்கில் கட்டுப்பாட்டு சங்கிலியில் குறைபாடு இருந்தது. அவர்கள் வேறொரு கிளினிக்கிற்குச் சென்றுவிட்டார்கள். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்” எனத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கையில், "இந்த மருத்துவப் பிழைக்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்