இந்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அவரது கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலக வேண்டும் என கனட லிபரல் கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


கனட நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் லிபரல் கட்சி எம்பிக்கள் சிலர், இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ரகசிய சந்திப்பின் போது, ​​அதிருப்தி எம்பிக்கள் தங்கள் குறைகளை ட்ரூடோவிடம் தெரிவித்திருக்கின்றனர்.


கனட பிரதமர் ட்ரூடோ ராஜினாமா செய்கிறாரா?


கனட நாடாளுமன்றத்தின் கீழ் சபை கூட்டம் நடந்து வரும் நிலையில், இந்த முக்கிய சந்திப்பு நடந்துள்ளது. ட்ரூடோவுக்கு எதிராக அவரது கட்சியிலேயே நாளுக்கு நாள் எதிர்ப்பு வளர்ந்து வருவது இதன் மூலம் தெளிவாகிறது. வரும் அக்டோபர் 28ஆம் தேதிக்கள் தன்னுடைய முடிவை ட்ரூடோ தெரிவிக்க வேண்டும் என அதிருப்தி எம்பிக்கள் காலக்கெடு விதித்துள்ளனர்.


இந்த விவகாரத்தில், 28 அதிருப்தி எம்பிக்கள் சேர்ந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், ட்ரூடோ ஏன் பதவி விலக வேண்டும் என காரணத்தை விளக்கியுள்ளனர். சந்திப்பின்போது, பிரிட்டிஷ் கொலம்பியா நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் வெய்லர், ட்ரூடோவின் ராஜினாமாவுக்கு ஆதரவாக பேசி ஆவணம் ஒன்றை சமர்பித்துள்ளார்.


அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்ததில் இருந்து, தேர்தலில் அக்கட்சி பெரும் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் அதேபோல் ட்ரூடோவும் செய்ய வேண்டும் என பிரிட்டிஷ் கொலம்பியா நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.


கட்சியிலேயே எழுந்த நெருக்கடி: 


தேர்தலுக்கு முன்பே ட்ரூடோ விலக வேண்டும் என அமைச்சர்கள் யாரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.  அதே சமயத்தில், பிரதமர் ட்ரூடோவுக்கு ஆதரவாகவும் ஏராளமான எம்.பி.க்கள் குரல் கொடுத்து வருகின்றனர். கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை விவகாரம், இந்திய, கனட நாட்டு உறலில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.


ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய தூதர் இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கண்டனம் தெரிவித்தது.


இம்மாதிரியான சூழலில், கனட பிரதமருக்கு அவரது கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.