துருக்கியில் பயங்கவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் அங்காராவில் உள்ள அந்நாட்டின் தேசிய விண்வெளி நிறுவனத்தின் தலைமையகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் நுழைந்துள்ளனர்.


துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள்:


இன்று மாலை 4 மணியளவில் கட்டிடத்திற்கு வெளியே பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அருகில் துப்பாக்கிச் சூடும் சத்தம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய விண்வெளி நிறுவனத்தின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் 14 பேர் உயிரிழந்ததாகவும் துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இந்த கொடூரமான தாக்குதலை நான் கண்டிக்கிறேன். கடைசி பயங்கரவாதியை வீழ்த்தும் வரை நமது போராட்டம் உறுதியுடன் தொடரும். வீர மரணம் அடைந்தவர்களுக்கு கடவுள் கருணை காட்டட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்றார்.


தேசிய விண்வெளி நிறுவனத்தின் தலைமையகத்தில் குண்டுவெடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றாக தேசிய விண்வெளி நிறுவனம் திகழ்கிறது.


வெளியான பரபரப்பு காட்சிகள்:


இது ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களையும் போர் விமானங்களையும் தயாரித்து வருகிறது. துருக்கி பாதுகாப்புத் துறை, வெளிநாட்டைச் சார்ந்திருப்பதை குறைப்பதற்காக கடந்த 1973 ஆம் ஆண்டு, துருக்கியின் தொழில்நுட்ப அமைச்சகம் இதை தொடங்கியது.


 






பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக துருக்கி அதிபர் எர்டோகன் ரஷியாவின் கசான் நகருக்கு சென்றிருக்கும் சமயத்தில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷிய பிரதமர் புதினுடன் எர்டோகன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.


இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், துருக்கியின் நீதித்துறை அமைச்சர், இதுகுறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.