Nepal Social Media: உள்நாட்டு விதிமுறைகளை பின்பற்ற தவறியதை தொடர்ந்து ஃபேஸ்புக், யூட்யூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களை நேபாள அரசு முடக்கியுள்ளது.
சமூக வலைதளங்களை முடக்கிய நேபாளம்:
நேபாள அரசு, ஃபேஸ்புக், எக்ஸ் மற்றும் யூட்யூப் உள்ளிட்ட பெரும்பாலான சமூக வலைதளங்களின் செயல்பாட்டை தங்களது நாட்டில் முடக்குவதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் பதிவு செயல்முறையை அந்த நிறுவனங்கள் பின்பற்றாததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சுமார் சுமார் 26 சமூக வலைதள நிறுவனங்களுக்கும், நாட்டில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்ய முன்வருமாறு பலமுறை அறிவிப்புகள் வழங்கப்பட்டதாகவும், அதனை மதித்து நடக்காததன் விளைவாக உடனடியாக தடை அறிவிப்பு அமலுக்கு வருவதாகவும் நேபாள தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் தெரிவித்துள்ளார்.
எந்த செயலிகளுக்கு அனுமதி?
நேபாளத்தில் தங்கள் நிறுவனங்களைப் பதிவு செய்து, உள்ளூர் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று அரசு பலமுறை வலியுறுத்தியும் ஏற்காத நிறுவனங்களின் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது. முறைப்படி விதிகளை பின்பற்றி பதிவு செய்துள்ள டிக்டாக், வைபர் மற்றும் பிற மூன்று சமுக வலைதள செயலிகள் மட்டும் நாட்டில் தொடர்ந்து செயல்பட நேபாள அரசு அனுமதித்துள்ளது.
சர்ச்சைக்குரிய மசோதா
சமூக தளங்கள் முறையாக நிர்வகிக்கப்படுவதையும், பொறுப்பானவை மற்றும் பொறுப்புணர்வுடன் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு மசோதாவை நேபாள அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்னும் முழுமையாக விவாதிக்கப்படாத இந்த மசோதா, தணிக்கை செய்வதற்கான ஒரு கருவியாகவும், ஆன்லைனில் தங்கள் எதிர்ப்புகளைக் குரல் கொடுக்கும் எதிரிகளைத் தண்டிப்பதாகவும் பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதற்கும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கும் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி இது என்று உரிமைக் குழுக்கள் விமர்சிக்கின்றன. சமூக ஊடகங்களைக் கண்காணிக்கவும், பயனர்கள் மற்றும் ஆப்ரேட்டர்கள் இருவரும் தாங்கள் பகிரும் மற்றும் இந்த தளங்களில் வெளியிடப்படும் அல்லது சொல்லப்படும் விஷயங்களுக்குப் பொறுப்பாகவும் இருப்பதை உறுதிசெய்யவும் சட்டங்களைக் கொண்டுவருவது அவசியம் என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
முடக்கப்பட்ட செயலிகள் என்ன?
பிரதான சமூக வலைதள செயலிகளான ஃபேஸ்புக், மெசெஞ்சர், இன்ஸ்டாக்ராம், யூட்யூப், வாட்ஸ்-அப், ட்விட்டர், லிங்க்ட் - இன், ஸ்னாப்சேட், ரெட்டிட், டிஸ்கோர்ட், பிண்ட்ரெஸ்ட், சிக்னல், த்ரெட்ஸ், விசாட், க்வொரா, டம்ப்ளர், க்ளப்ஹவுஸ், ரம்பிள், Mi Video, Mi Vike, லைன், Imo, Jalo, Sol, மற்றும் Hamro Patro உள்ளிட்ட அனைத்து முக்கிய சமூக ஊடகங்கள் மற்றும் தொடர்பு தளங்களும் பதிவு செயல்முறையை முடிக்கும் வரை தடைசெய்யப்படும் என நேபாள அரசு அறிவித்துள்ளது. இதனால் சமூக வலைதள பயனர்கள் கடும் அதிர்ச்சிக்குளாகியுள்ளனர். தினசரி நடைமுறையில் இந்த செயலிகள் முக்கிய பங்கு வகித்துள்ளதால், அவற்றின் முடக்கம் மக்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.