வருகின்ற 24 நவம்பர் அன்று விண்கோளுடன் தனது ஸ்பேஸ்கிராஃப்ட் ஒன்றை மோதச் செய்வதற்கு சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது. மனித வரலாற்றிலேயே இது போன்று கோளுடன் விண்கலத்தை மோதச் செய்வது இதுவே முதல் முறை. ஆனால் இப்படி மோதச் செய்யக் காரணம் என்ன? பல கோடிக்கணக்கில் உருவான ஒரு விண்கலத்தை கோளுடன் மோதச் செய்யக் காரணம் என்ன?. ஹாலிவுட் சினிமாப் பாணியில் உலகத்தைக் காப்பாற்றுவதற்கு என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. ஹாலிவுட் சினிமாக்களில் பூமியை நோக்கி மோதவரும் விண்கற்களை ஒரு ஸ்பேஸ்கிராஃப்ட் கொண்டு சுக்கல் நூறாக்கி ஆபத்தை திசைதிருப்புவார் ஹீரோ. பெரும்பாலான மார்வல் சூப்பர் ஹீரோக் கதைகளின் ஒன்லைன் இதுதான். 






தற்போது இதே பாணியை உண்மையாகவே பின்பற்ற இருக்கிறது நாசா. இதற்கு (Planetary Defence system) எனப் பெயரிட்டுள்ளனர். எதிர் வரும் காலங்களில் இதுபோன்ற விண்கோள் தாக்குதல்களில் இருந்து பூமியைக் காப்பாற்றும் திட்டத்தின் முதல் படிக்கல்லாக டார்ட் மிஷன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் இருக்கும் (DART mission) என நாசா கூறியுள்ளது. இந்த விண்கலம் நவம்பர் 24 அன்று ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான் 9 ராக்கெட்டின் மூலம் கலிஃபோர்னியாவின் வாண்டன்பெர்க் ஸ்பேஸ் ஃபோர்ஸ் தளத்தில் இருந்து ஏவப்படுகிறது.