சீனாவில்  பெங் ஷூவாய் செய்திதான் சில தினங்களாக பரபரப்பாக உள்ளது. பிரபல டென்னிஸ் வீராங்கனையான பெங், ஒரு பாலியல் புகாரால் காணாமல் போனதாக தகவல் பரவியது. அதற்கு ஏற்ப அவரும் யார் கண்ணிலேயும் சிக்கவில்லை. இதனால் பல யூகங்கள், பல வதந்திகள் பரவின. இந்நிலையில் பரவிய தகவலுக்கெல்லாம் தற்போது விடை கிடைத்துள்ளது


உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவர் பெங் ஷூவாய். உலக தரவரிசைப் பட்டியலில் முதன்முறையாக முதலிடம் பிடித்த சீன டென்னிஸ் வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவர் விம்பிள்டன், பாரீஸ் ஓபன் என ஒற்றையர் பிரிவில் இருமுறையும், இரட்டையர் பிரிவில் 22 முறையும் சாம்பியன் பட்டம் வென்றவர்.




35 வயதான பெங் ஷூவாய் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளப் பக்கமான வெய்போவில் சீனாவின் அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவரான ஜாங் கயோலி மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவிட்டார். அந்த பதிவில், ஜாங்கயோலி 2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை தன்னை கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட சில மணிநேரங்களிலே அந்த பதிவு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், அதன் ஸ்கிரீன்ஷாட்கள் உலகம் முழுவதும் பரவியது.


இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டை அளித்த பிறகு டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவாய் மாயமானதாக தகவல் வெளியானது. அதன் பின்னர் அவர் ஒரு வீடியோவில் தோன்றியதாகவும் அவர் காணாமல் போகவில்லை எனவும் கூறப்பட்டது. ஆனால் அது பழைய வீடியோ என்றும் அவர் காணாமல்தான் போய்விட்டதாகவும் ஒருதரப்பு கூறி வந்தது. இந்நிலையில் டென்னிஸ் வீராங்கனை தொடர்பான பல கேள்விகளுக்கு ஒலிம்பிக் இயக்குநர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, சீனாவின் டென்னிஸ் வீராங்கனை பெங் பத்திரமாக இருக்கிறார். அவர் ஒலிம்பிக் இயக்குநருடன் வீடியோ காலில் பேசினார். அப்போது பேசிய வீராங்கனை, தான் பத்திரமாக இருப்பதாகவும், பீஜீங்கில் உள்ள தன்னுடைய வீட்டில் தங்கியுள்ளதாகவும் கூறினார் என குறிபிடப்பட்டுள்ளது. இதனையடுத்து வீராங்கனையை சுற்றிய மர்மம் விலகியதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண