PHL7:


நாம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் அழிவதற்கு 100 ஆண்டுகளுக்கு மேலாகும். இதனால் நாம் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், பிளாஸ்டிக்கை உட்கொண்டு வாழும் புழுக்கள் இனம் ஒன்று, பிளாஸ்டிக் மறுசுழற்சியில் புரட்சியை ஏற்படுத்த உதவும் என, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஜோபோபாஸ் மோரியோ (Zophobas morio) என்ற புழுக்கள் இனம், பாலிஸ்டீரைன் எனப்படும் பிளாஸ்டிக்கை உட்கொண்டு வாழ்கிறது என்பதை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். இந்தப் புழுக்களின் குடலில் உள்ள நொதிகளின் வாயிலாக அவை பிளாஸ்டிக்கை செரித்து வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த வகையான பாக்டீரியாக்கள் 16 மணி நேரத்தில் 90 சதவீத polyethylene terephthalate (PET) பிளாஸ்டிக்கை அழித்துவிடுகிறது என்கிறது ஆய்வு. இதுகுறித்த ஆய்வுகள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இருப்பினும், ஏன் கடலில் இன்னும் பிளாஸ்டிக் கழிகளின் எண்ணிக்கை குறையில்லை என்று கேள்வியும் எழத்தான் செய்கிறது. பிளாஸ்டிக்கை நொதிக்க செய்யும் ஒரு உயிரி கண்டறியப்படுவது இது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இம்முறை கண்டறியப்பட்டதன் சிறப்பு குறைவான நேரத்தில் அதிகப்படியான பிளாஸ்டிக்கை உண்ணும் என்பதுதான்.


ஓர் உயிரி பிளாஸ்டிகை அழிக்கும் என்பது எளிதானதல்ல:


பிளாஸ்டிக் எல்லாம் ஒரே மாதிரி இல்லை.  பாக்டீரியாக்கள் ஒரு குறிப்பிட்ட வகையான பிளாஸ்டிக்கிற்கு மட்டுமே வேலை செய்கின்றன, மேலும் நமது குப்பையின் பெரும்பகுதி பல வகையான பிளாஸ்டிக் வகைகளை உள்ளடக்கியது என்பதை உணர வேண்டும். பாலிஎதிலீன் அல்லது பாலிப்ரோப்பிலீன் வகைகளை  வேதியியல் ரீதியாக உடைப்பது எளிது. ஆனால், இந்த நடைமுறை முக்கியமானதல்ல. 


நிரந்தர தீர்வல்ல:


இந்த ஆய்வின் தீர்வுகளில் பெரும்பாலானவை நமது பிளாஸ்டிக் பிரச்சனையை முழுவதுமாகத் தீர்ப்பதற்குப் பதிலாக, அதைக் குறைக்க மட்டுமே செய்யும். ஏனெனில், ஓர் உயிரி பிளாஸ்டிக்கை  குறிப்பிட்ட வெப்பநிலையில், சிறப்பு சூழல்களில் அல்லது நீண்ட காலத்திற்குப் பிறகு மட்டுமே அழிக்கும் திறன் கொண்டிருக்கும். பிளாஸ்டிக் உண்ணும் புழுக்களை நாம் கடலில் கொண்டு வீச முடியாது. அதேசமயம் இதற்கு அறிவியல் ஆராய்ச்சி கூடங்கள் அமைத்து பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதற்கு அதிக நிதி முதலீடுகள் தேவைப்படும். மேலும், இந்த நடைமுறை பிளாஸ்டிக்கை இல்லாமல் ஆக்கிவிடாது. ஆனால்,அதன் மூலம் பல விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 


மேலும், இந்த நடைமுறை தொடர்ந்தால், உலகில் பிளாஸ்டிக் உற்பத்தி என்றுமே குறையாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். 


இயற்கைக்கு ஆபத்து: 


பிளாஸ்டிக் உண்ணும் பாக்டீயாக்களை கடலிலோ அல்லது குப்பை கிடங்கிலோ விட்டு பிளாஸ்டிக்கை உண்ண செய்தால், அதிலிருந்து வெளியேறும் நச்சுக்கள் பூமிக்கு ஆபத்தானவைகள் இல்லை என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை. 


மேலும், நாம் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்வதாக பெருமையடைந்தாலும், உலக அளவில் 80 சதவீத பிளாஸ்டிக்குகள் மறுசுழற்சி செய்வதே இல்லை. பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் மாசுபாடை தவிர்க்க நாம் எவ்வித பாக்டீரியாக்களையும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்துக்கின்றனர் அறிவியலாளர்கள். இதற்கு ஓரே தீர்வு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதுதான். பிளாஸ்டி பயன்பாட்டை தவிர்ப்பதுதான் என்று அறிவுரை கூறுகின்றனர்.


கார்பியோஸ் என்ற நிறுவனம்  2024 ஆம் ஆண்டீல் வணிக அளவிலான புதிய வகையிலான  நவீன பிளாஸ்டிக் மறுசுழற்சி வசதியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 


இதுபோன்ற ஆய்வுகள், புதிய செயல்முறைகள் இங்கு நிலவும் பிளாஸ்டிக் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுமா என்பதை காலம் சொல்லும். இதற்கிடையில், மற்ற விஞ்ஞானிகளும் நிறுவனங்களும் பிளாஸ்டிக்கை முழுவதுமாக மாற்றக்கூடிய மக்கும் தன்மை கொண்டதாக  உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


ஆனால், நாம் நிச்சயமாக புதிய திட்டங்கள் செயலுக்குவர காத்திருக்க வேண்டியதில்லை  என்கின்றர் ஆய்வாளர்கள. உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள்  பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டுபிடித்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும்,  அவைதான் நமக்கு உதவும் என்கின்றனர்.