சீனா- ஆப்கானிஸ்தான் இடையிலான நட்புறவை வலுப்படுத்த விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது. தாலிபன்கள் வசம் ஆப்கானிஸ்தான் சென்றுவிட்ட பிறகு, சீன செய்தித்தொடர்பாளரின் இந்த அறிவுப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. 


சீனா - ஆப்கானிஸ்தான் உறவு எத்தகையது : அண்டை நாடான ஆப்கானிஸ்தானிடம் சீனா எப்போதுமே நல்லுறவை கடைபிடித்து வருகிறது. உதாரணமாக, 2001-ஆம் ஆண்டில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசுடன் அதிகாரப்பூர்வ உறவை ஏற்படுத்திய முதல் நாடு சீனாதான். மேலும், காபூலில் உள்ள தனது தூதரகத்தை மீண்டும் திறந்தது மட்டுமல்லாமல், உடனடியாக  5 மில்லியன் அமெரிக்கா டாலர் மனிதாபிமான மற்றும் பேரிடர் மீட்பு நிதியாக அறிவித்தது. ஆப்கானிஸ்தானுக்கு, சீனா தனது ராணுவப்படையை நேரடியாக அனுப்பவில்லை என்றாலும், அந்நாட்டின் காவல்படைகளுக்கு தேவையான பயிற்சியை அளித்தது. ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட ராணுவப் படைகளை அனுப்பவேண்டும் என்ற மேலை நாடுகளின்  கோரிக்கையை சீனா இறுதிவரை மறுத்துவிட்டது. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 200 மில்லியன் அமெரிக்கா டாலரை சீனா பொருளாதார நிதியாக வழங்கியுள்ளது. மேலும், அந்நாட்டின் காப்பர் வளங்களின் மீது கணிசமான முதலீடுகளை செய்துள்ளது.   


சீனா ஏன் நட்புறவு கொள்கிறது: 


அரசியல் ஆதாயம் இல்லாமல் சீனா எதுவும் செய்வதில்லை.


முதலாவதாக, சீனாவின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் உள்ளது. சீனாவிலிருந்து உய்குர் சிறுபான்மையினருக்கு தனி நாட்டை உருவாக்கவேண்டும் என்ற நோக்கில் போராடி வருகிறது. தற்போது, ஆப்கானிஸ்தானின் பதக்க்ஷான் பிராந்தியத்தில் இருந்து செயல்பட்டுவரும் இந்த இயக்கத்தை முறியடிக்க சீனா விரும்புகிறது. 




இரண்டாவதாக, பாகிஸ்தானின் உள்நாட்டு தாலிபன் அமைப்பான தெகரிக்கு-இ-தாலிபான் (Tehreek-e-Taliban Pakistan) அமைப்பு சீனாவின் பட்டுப் பாதை (Silk Road) திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது.  இந்த அமைப்பு, ஆப்கானிஸ்தான் தாலிபன்களுடன் சில நட்புறவுகளைக் கொண்டுள்ளது. எனவே, ஆப்கானிஸ்தான்  தாலிபான்களுடன் நெருங்கி செல்வதன் மூலம், தெகரிக்கு-இ-தாலிபானின் அபாயத்தைக் குறைக்க முடியும். 


மூன்றாவதாக, சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (அக்சய் சின்) பகுதிகளில் இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்க தாலிபன் அமைப்பின் உதவியும் சீனாவுக்கு தேவைப்படுகிறது. 




நான்காவதாக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் அமெரிக்காவின் செல்வாக்கை முற்றிலுமாக குறைக்க முடியும்.       


சீனாவின் இந்த கணக்கு பலிக்குமா? 


முன்னதாக, கடந்த மாதம் தாலிபன் பிரதிநிதித்துவ குழுவினர், சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வான்ங் யு-ஐ (Wang Yi) சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தாலிபன்கள், " ஆப்கானிஸ்தான்  மண்ணில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள அனுமதிக்க மாட்டோம்" என்று தெரிவித்தனர். 




இருந்தாலும், தாலிபன்களின் நேர்மை சந்தேகத்திற்கு உட்பட்டதுதான். பல்வேறு காலகட்டங்களில், தாலிபன்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே, சீனா தாலிபன்களை பயன்படுத்தப் போகிறதா? அல்லது தாலிபன்கள் சீனாவை பயன்படுத்தப் போகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், அமெரிக்கா போன்று சீனா நேர்மையான நாடு என்று கருத  முடியாது. சீனா, பொதுவாக இதர நாடுகளில் சர்வாதிகார அரசியல் போக்கை வரவேற்கிறது. 


மேலும், ஆப்ரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம் போன்ற பல்வேறு நாடுகளின் வளங்களை சீனா அபகரிக்க முனைகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. பொருளாதார முதலீடு என்ற பெயரில் வளர்ந்து வரும் நாடுகளில் மறுகாலனி ஆதிக்கம் செய்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ, பாகிஸ்தானுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று உலக நாடுகளின் கோரிக்கையை சீனா ஏற்கவில்லை. இது, சீனாவின் இரட்டை வேடமாக பார்க்கப்படுகிறது.