ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ரஷித் கான் மற்றும் முகமது நபி ஆகியோர் ஐபிஎல் டி-20 தொடரில் விளையாடுவார்களா என்பதில் சந்தேகம் நிலவுகிறது










முன்னதாக, ஆப்கானிஸ்தானில் நிலவி வந்த போர் சூழலால் பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது ’தி ஹண்ட்ரட்’ தொடருக்காக லண்டனில் விளையாடி வரும் ரஷித் கான், தனது ட்விட்டர் பக்கத்தில் உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஓர் உருக்கமான கோரிக்கையை முன்வைத்திருந்தார். 


கடந்த ஆகஸ்டு 10-ம் தேதி அவர் பதிவிட்ட பதிவில், “அன்பான உலகத் தலைவர்களே, என்னுடைய நாடு பெருங்குழப்பத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள், அதில் குழந்தைகளும் பெண்களும் வீடுகளை இழந்து நிற்கின்றனர். உயிர்த்தியாகம் செய்து வருகின்றனர். பல்லாயிரக் கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு குடிப்பெயர்ந்து வருகின்றனர். எங்களுடைய நாட்டை குழப்பத்தில் விட்டுவிடாதீர்கள். ஆப்கானிஸ்தான் நாட்டையும், ஆப்கான் மக்களையும் அழித்து வருவதை நிறுத்துங்கள். எங்களுக்கு அமைதி வேண்டும்” என உருக்கமாக பதிவிட்டிருந்தார். 


இந்த பதிவு பதிவிட்டதில் இருந்து அடுத்த ஆறு நாட்களில் ஆப்கானிஸ்தானின் நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது. இந்நிலையில், இப்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முற்றிலுமாக கைப்பற்றியுள்ளதால், ரஷித் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “அமைதி வேண்டும், உறக்கம் வரவில்லை” என பதிவிட்டுள்ளார்.


ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழலுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் ரஷித் கான் மற்றும் முகமது நபி ஆகியோர் பங்கேற்பது உறுதி என சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி நிர்வாக அதிகாரி சன்முகம் தெரிவித்துள்ளார். எனினும், வீரர்கள் பங்கேற்பது குறித்து அவர்கள் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை. 


Kabul Airport Gunfire: விமானத்தில் ‛புட்போர்டு’ அடிக்கும் மக்கள்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி... தொடர்ந்து பதட்டம்!