நவீன தொழில்நுட்பம், உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித இனம் எதிர்கொள்ளும் பல்வேறு விதமான சவால்களுக்கு விஞ்ஞான உலகமே விடை அளித்து வருகிறது. புதிய கண்டுபிடிப்புகள் தொடங்கி தற்போது பெருந்தொற்று வரையில், விஞ்ஞானம் தீர்த்து வைக்காத பிரச்னைகளே இல்லை என்று கூட சொல்லலாம்.
போட்டி போட்டு கொள்ளும் அமெரிக்காவும் சீனாவும்:
அப்படிப்பட்ட விஞ்ஞான உலகில், அமெரிக்காவும் சீனாவும் போட்டி போட்டு கொண்டு பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள சீனா செய்து வரும் ஆராய்ச்சி அனைவரையும் வியக்க வைத்து வருகிறது.
பூமியில் 10 ஆயிரம் மீட்டர் (32,808 அடி) ஆழத்திற்கு சீன விஞ்ஞானிகள் துளையிட தொடங்கியுள்ளனர். பூமியின் மேற்பரப்பிற்கு மேலேயும் கீழேயும் புதிய எல்லைகளை ஆராயும் வகையில் ஆய்வு செய்து வருகின்றனர் விஞ்ஞானிகள். எண்ணெய் வளம் மிக்க ஜின்ஜியாங் பகுதியில் சீன வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நீண்ட ஆழத்திற்கு துளையிடும் பணி நேற்று தொடங்கியது.
பூமியின் ஆழமான துளை:
சீனா தனது முதல் விண்வெளி வீரரை கோபி பாலைவனத்திலிருந்து நேற்று விண்வெளிக்கு அனுப்பிய நிலையில், துளையிடும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. தரையில் போடப்பட்டு வரும் துளை, 10க்கும் மேற்பட்ட கண்ட அடுக்குகள் அல்லது பாறை அடுக்குகளை ஊடுருவிச் சென்று, பூமியின் மேலோட்டத்தில் உள்ள கிரெட்டேசியஸ் அமைப்பை அடையும்.
145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பாறைகள், இங்குதான் இருக்கும். சீன பொறியியல் அகாடமியின் விஞ்ஞானி சன் ஜின்ஷெங்
சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சி குறித்து பேசுகையில், "துளையிடும் திட்டத்தின் கட்டுமான சிரமத்தை இரண்டு மெல்லிய எஃகு கேபிள்களில் ஓட்டப்படும் ஒரு பெரிய டிரக்குடன் ஒப்பிடலாம்" என்றார்.
சுற்றுச்சூழல் பேரழிவுகளின் அபாயங்களை மதிப்பிட ஆராய்ச்சி:
கடந்த 2021 ஆம் ஆண்டு, நாட்டின் சில முன்னணி விஞ்ஞானிகளுடன் உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின்பிங், "பூமி தொடர்பான ஆய்வில் அதிக முன்னேற்றம் காண வேண்டும்" என்றார். இத்தகைய வேலை கனிம மற்றும் ஆற்றல் வளங்களை அடையாளம் காணவும் மற்றும் பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற சுற்றுச்சூழல் பேரழிவுகளின் அபாயங்களை மதிப்பிடவும் உதவும்.
பூமியில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆழமான துளை, ரஷியாவில் உள்ள கோலா சூப்பர் டீப் போர்ஹோல் ஆகும். 20 ஆண்டு கால தோண்டும் பணிக்கு பிறகு, கடந்த 1989 ஆம் ஆண்டு, 12,262 மீட்டர்களுக்கு துளையிடப்பட்டது.