அமெரிக்காவுக்கு ஆறு நாள் பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நேற்று அமேரிக்க வாழ் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது, பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.


"எல்லாம் தெரியும் என்று உறுதியாக நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது"


சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, "கடவுளை விட தங்களுக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கும் மக்கள் இந்தியாவில் உள்ளனர். பிரதமர் மோடி அப்படிப்பட்டவர்தான். சிலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைத்து, வரலாற்றை வரலாற்றாசிரியர்களுக்கும், அறிவியலை விஞ்ஞானிகளுக்கும், ராணுவத்திற்குப் போரையும் விளக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.


உலகம் மிகவும் பெரியது. சிக்கலானது. எந்தவொரு நபரும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாது. ஒரு நோய் இருக்கிறது. இந்தியாவில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று உறுதியாக நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது. கடவுளை விட தங்களுக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கிறார்கள்.


"பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பதை கடவுளுக்கு விளக்குவார்"


அவர்கள் கடவுளுடன் அமர்ந்து என்ன நடக்கிறது என்பதை அவருக்கு விளக்கலாம். நிச்சயமாக, நமது பிரதமர் அத்தகைய ஒரு நபர்தான். நீங்கள் மோடியை கடவுளுடன் உட்கார வைத்தால், பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பதை கடவுளுக்கு விளக்குவார். நான் எதை உருவாக்கினேன் என்பதில் கடவுளே குழப்பமடைவார்.


வரலாற்றாசிரியர்களுக்கு வரலாற்றையும், விஞ்ஞானிகளுக்கு அறிவியலையும், ராணுவத்திற்குப் போரையும் விளக்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதன் அடிப்படையே அற்பத்தனம். அவர்கள் எதை கேட்கவும் தயாராக இல்லை" என்றார். இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில்தான் ராகுல் காந்தி இப்படி பேசியுள்ளார்.


"இந்தியாவை அவமதிக்கும் ராகுல் காந்தி"


ராகுல் காந்தியின் கருத்துக்கு கடுமையாத எதிர்வினை ஆற்றியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், "தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது, ​​ராகுல் காந்தி இந்தியாவை அவமதிக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் பிரதமர் மோடியை அவமதிக்க விரும்புகிறார். 


ஆனால், இந்தியாவை அவமதிக்கிறார். இந்தியாவின் முன்னேற்றத்தை கேள்விக்குள்ளாக்குகிறார். நமது வளர்ச்சியை உலகமே அங்கீகரிக்கும் நேரத்தில் அவர் இந்தியாவை களங்கப்படுத்த முயற்சிக்கிறார்.


பிரதமர் மோடி சமீபத்திய தனது வெளிநாட்டு பயணங்களின்போது கிட்டத்தட்ட 24 பிரதமர்கள், உலகின் அதிபர்களை சந்தித்துள்ளார். வெளிநாட்டு பயணங்களில் 50க்கும் மேற்பட்ட சந்திப்புகளை நடத்தியுள்ளார். பல உலக தலைவர்கள் மோடி மிகவும் பிரபலமான தலைவர் என்று கூறுகிறார்கள். 'பிரதமர் மோடிதான் பாஸ்' என்று ஆஸ்திரேலிய பிரதமர் கூறியதும், ராகுல் காந்தியால் இதை ஜீரணிக்க முடியவில்லை" என்றார்.