அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளம் சீனாவின் 600 பிராண்டுகளின் பொருட்களை நிரந்தரமாக நீக்கியுள்ளது. இது சீனாவுக்குப் பேரதிர்ச்சியாக இறங்கியுள்ளது.


தி வெர்ஜ் இணையதளத்தில் இது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. உலகளவில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் அடிப்படையில் இந்த 600 பிராண்டுகளின் பொருட்களையும் அமேசான் தடை செய்துள்ளதாகத் தெரிகிறது. வாடிக்கையாளர்களின் கருத்துகளின் முறைகேடு செய்து அமேசான் நிறுவனத்தி கொள்கைக்கு மாறாக செயல்பட்டதால் சீன நிறுவனங்களுக்கு இந்தக் கெடுபிடியை அமேசான் விதித்துள்ளது.


ஏற்கெனவே வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தி, சீன பிராண்ட்கள் சில வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்கள் பற்றி நல்ல மாதிரியான கருத்துகளைப் பகிர சலுகையாக கிஃப்ட் கூப்பன் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளதை அம்பலப்படுத்தியது.


இது குறித்து தி வெர்ஜ் இணையதளத்துக்கு அமேசான் நிறுவனம் அளித்த பேட்டியில், அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவம் வழங்க வேண்டும் என்பதற்காக கடினமாக உழைக்கிறது. எங்கள் தளத்தில் வாங்கும் பொருட்களை வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் வாங்கலாம் என்பதற்காகவே ரிவீய்வூ என்றொரு ஆப்ஷனை வைத்துள்ளது.  


வாடிக்கையாளர்கள் அவர்கள் தேர்வு செய்யும் பொருட்களின் கீழ் ஏற்கெனவே அதனை வாங்கியோர் அளிக்கும் பின்னூட்டத்தை மிகவும் நம்புகின்றனர். அதன் அடிப்படையில் பொருட்களைத் தேர்வு செய்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் இருவருமே பயனடைகின்றனர்.


ஆனால் சில சீன நிறுவனம் எங்களின் இந்தக் கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டுள்ளன. அவ்வாறாக விதிமுறை மீறும் நிறுவனங்கள் உலகின் எந்தவொரு பகுதியில் இருந்தாலும் நாங்கள் அவர்களைத் தடை செய்து, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிரோம். அதனால் ஒரே நேரத்தில் 600 சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் தனிப்பட்ட முறையிலான தாக்குதல் இல்லை.


மேலும், இதுபோன்ற குறுக்குவழிகளில் விதிமுறைகளை மீறுவோரை அறியும் நடைமுறைகளை இன்னும் சிறப்பான முறையில் கட்டமைப்போம். அப்போது தான் அடிக்கடி விதிமுறை மீறுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் எங்களின் வாடிக்கையாளரின் நலன் கருதியே மேற்கொள்ளப்படுகிறது.


எங்கள் தளத்தில் நேர்மையான நிறுவனங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அவர்கள் வாடிக்கையாளர்களுடன் நீடித்த, நிலைத்த வர்த்தக உறவை மேற்கொள்ளலாம் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.


எவ்விதமான ஊழல் மற்றும் சட்ட விரோதமான பணிகளும் அமேசானில் இடமில்லை, என அமேசான் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமேசான் நிறுவனம் தீபாவளிப் பண்டிகை காலத்தை ஒட்டி இந்தியாவில் விரைவில் ஷாப்பிங் திருவிழாவை அறிவிக்கவுள்ள நிலையில் சீன நிறுவனங்களுக்கான தடை வந்துள்ளது சீனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.