ரஷ்யாவில் பெர்ம் கிராய் பகுதியில் உள்ள பெர்ம் மாநில பல்கலைக்கழகத்தில் இன்று காலை மாணவர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். 6 பேர் காயமடைந்தனர்.
வித்தியாசமான உடையுடன், தலையில் கவசத்துடன் துப்பாக்கி ஏந்தியவாறு காலை 11 மணியளவில் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த மாணவர், ஐரோப்பா மற்றும் ஆசியா சந்திக்கும் அருகிலுள்ள யூரல்ஸ் பகுதியில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். 6 பேர் காயமடைந்தனர்.
பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தும் மாணவரிடம் தப்பிக்க அறைகளில் தங்களைப் பூட்டிக்கொண்டனர். அதே சமயம் சிலர் பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பித்தனர். துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிக்க சில மாணவர்கள் ஜன்னல்களிலிருந்து குதிக்கும் காட்சிகளும் கேமராவில் பதிவாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகும் மற்றொரு வீடியோவில், ஆயுதமேந்திய ஒருவர் கருப்பு உடை அணிந்து ஹெல்மெட் அணிந்து மெதுவாக வளாகம் முழுவதும் நடந்து செல்வதைக் காட்டுகிறது. இந்த வீடியோ கட்டிடத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மாணவரை போலீசார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது. மேலும், அந்த மாணவர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், மாணவர்களின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளது.