ஆப்கனில் ஐபிஎல் ஒளிபரப்புக்கு தடை விதித்தது தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.


எதற்கு ஆப்கன் மக்கள் அஞ்சினார்களோ அவை ஒவ்வொன்றாக அங்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆப்கனில் பெண் கல்விக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பெண்கள் வேலைக்கு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இசை, சினிமா என எல்லாவகையான கலைகளுக்கும் எப்போதுமே தலிபான்கள் எதிரிகள்தான். விளையாட்டாய் கூட விளையாட்டு பிடிக்காது அவர்களுக்கு. கடந்த 20 ஆண்டுகளில் தலிபான்கள் தலையீடு இல்லாததால் அங்கு கிரிக்கெட் அணி உருவானது. பெண்கள் கிரிக்கெட் அணியும் கூட உருவானது. ஆனால், இப்போது மீண்டும் தலிபான்கள் ஆட்சி அமைந்துவிட்டதால், விளையாட்டு, கேளிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 நடைபெற்று வரும் நிலையில், அந்த போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வர்ணனையில் இஸ்லாம் எதிர்ப்புக் கொள்கைகள் இருக்கலாம் என்பதால் ஐபிஎல் வர்ணனைக்கு தடை விதிப்பதாகத் தலிபான்கள் கூறியுள்ளனர். இதனை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும், பத்திரிகையாளருமான எம்.இப்ரஹிம் மோமந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.


ஆப்கானிஸ்தானில் விளையாட்டுத் துறைக்கான புதிய இயக்குநர் பஷீர் அகமது ருஸ்தாம்ஸாய், பெண்கள் இனி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற கேள்விக்கு அதனை தலிபான் உயர்மட்டக் குழு முடிவு செய்யும் என்று கூறிவிட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுனிலின் விதிமுறைகளின் படி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடவும் அனுமதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.




 
முன்னதாக, ஆப்கானிஸ்தானுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே வரலாற்றிலேயே முதன்முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறவிருந்தது. நவம்பர் மாதம் இது நடைபெறவிருந்தது. ஆனால், மூத்த தலிபான் அதிகாரி ஒருவர் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் பெண்கள் விளையாடத் தேவையில்லை என்று கூறியிருந்தார். இதனால், ஆஸ்திரேலியா ஆப்கனுடனான டெஸ்ட் தொடரை ரத்து செய்யும் சூழல் எழுந்துள்ளது. முந்தைய தலிபான் ஆட்சியில் விளையாட்டு மைதானங்கள் அனைத்துமே தவறு செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் இடமாக இருந்தது. இப்போது தலிபான்கள் பெண்கள் விளையாட்டுக்குத் தடை என்றளவில் கெடுபிடியை ஆரம்பித்துள்ளது. இது எந்த அளவுக்குச் செல்லும் என்று தெரியவில்லை.


இதற்கிடையில் வரும் அக்டோபர் தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை ஆப்கன் ஆடவர் கிரிக்கெட் அணி, யுஏஇ மற்றும் ஓமனில் நடைபெறும் ஐபிஎல் டி 20 போட்டியில் பங்கேற்கவிருக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆப்கானிஸ்தான் ஆடவர் அணிக்கு எவ்வித தடையும் விதிக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் கலாச்சார மதச் சூழலில் எதிர்க்கும் அளவுக்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. மேலும், இன்னமும் கூட மகளிர் கிரிக்கெட் அணி விளையாட அனுமதி கிடைக்கும் என்று ஒரு சிறு நம்பிக்கை இருப்பதாக ஏசிபி சேர்மன் அஸிசுல்லா ஃபாஸில் தெரிவித்துள்ளார்.