உலகின் முதல் குரங்கம்மை (Mpox) தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புதலுக்கு முந்தைய அனுமதி வழங்கியுள்ளது. அவசர தேவையுள்ள மக்களுக்கு தடுப்பூசியை விரைவாக வழங்கிட வழி செய்யும் வகையிலும் பரவலை தடுக்கும் நோக்கிலும் தீவிர நோயாக மாறிவிடுவதை தவிர்ப்பதற்காகவும் அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


குரங்கம்மைக்கு முதல் தடுப்பூசி: கொரோனாவை தொடர்ந்து மக்கள் மத்தியில் குரங்கம்மை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், MVA-BN என்ற தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்கி இருப்பது மக்களை நிம்மதி பெருமூச்சு விட செய்துள்ளது.


தடுப்பூசி, நோய் சிகிச்சை மற்றும் மருந்து என மருத்துவ தயாரிப்புகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன், போன்றவற்றை மதிப்பிடுவதற்கான வழிமுறையே அவசர கால ஒப்புதலாகும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் மருத்துவ தயாரிப்புகளை பயன்பாட்டில் விடுவதற்காக அவசர கால ஒப்புதல் வழங்கப்படும்.


உலக சுகாதார அமைப்பு: Bavarian Nordic A/S என்ற நிறுவனம் குரங்கம்மை தடுப்பூசியை தயாரித்துள்ளது. ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம், இதை ஆய்வுக்கு உட்படுத்தி சோதித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், "mpox க்கு எதிரான தடுப்பூசியின் இந்த முதல் அனுமதியானது. ஆப்பிரிக்காவில் தற்போதைய பரவலுக்கு பின்னணியில், எதிர்காலத்திலும் நோய்க்கு எதிரான நமது போராட்டத்தில் ஒரு முக்கியமான படியாகும்.


 






நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், பரவுவதை நிறுத்தவும் மற்றும் உயிர்களைக் காப்பாற்றவும், பிற பொது சுகாதாரக் கருவிகளுடன், தடுப்பூசிகள் மிகவும் தேவைப்படும் இடங்களில் சமமான அணுகலை உறுதிசெய்ய, அதிகமாக எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய வேண்டி இருக்கிறது" என பதிவிட்டுள்ளார்.