அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக பதவி வகித்து வரும் ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். இதற்காக இருவரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் முக்கியமான நகரங்களில் ஒன்றான பெனிசில்வேனியாவில் நேற்று முன்தினம் டொனால்ட் ட்ரம்ப் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.


ட்ரம்பை சுட்டவர் யார்?


அப்போது, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவரது காதில் மட்டுமே குண்டு உரசிச் சென்றதால் அவருக்கு பெரியளவில் எந்த பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, அமெரிக்க பாதுகாப்பு படையினர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுட்டு வீழ்த்தினர்.


தற்போது ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது 20 வயதே ஆன மேத்யூ க்ரூக்ஸ் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர் பெனிசில்வேனியாவில் உள்ள பெதேல் பார்க்கில் வசித்து வந்தவர் என்று எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.


யார் இந்த க்ரூக்ஸ்?


20 வயதே ஆன மேத்யூஸ் க்ரூக்ஸ் எதற்காக ட்ரம்பை கொலை செய்ய முயற்சித்தார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ட்ரம்ப் அங்கு பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் ஒரு மாடியில் இருந்து மற்றொரு மாடிக்குச் சென்று கொண்டிருந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பு படையினரிடம் எச்சரிக்க முயற்சித்துள்ளனர். ஆனாலும், அவர்களால் பாதுகாப்பு படையினரிடம் தகவல் தெரிவிக்க முடியவில்லை. உயிரிழந்தவரின் சடலத்தின் அருகே ஏ.ஆர். – 15 துப்பாக்கியையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மேத்யூஸ் க்ரூக்ஸ் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், பல்வேறு முரண்பாடான தகவல் வெளியாகியுள்ளது. பள்ளியிலே மிகவும் அமைதியான மாணவராக மேத்யூஸ் க்ரூஸ் இருந்துள்ளார். அவர் எப்போதும் பள்ளியில் அரசியல் பற்றியோ, ட்ரம்ப் பற்றியோ விவாதத்திலோ ஈடுபட்டதில்லை. 


அமைதியான மாணவர்:


பள்ளியில் மிகவும் அமைதியான மாணவராக இருந்து வந்த மேத்யூஸ் க்ரூசை, சக மாணவர்கள் பள்ளியில் அடிக்கடி கேலி செய்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு நர்சிங் பயிற்சியை முடித்த அவர், வீடுகளுக்கே சென்று நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் நர்சாக பணியாற்றி வந்துள்ளார்.


அதிகாரிகள் தற்போது அவரது செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர். அவரது காரில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த பொருளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மிகவும் அமைதியான மாணவரான மேத்யூஸ் க்ரூக்ஸ் 2022ம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார். மேலும், அந்த நாட்டு தேசிய கணித மற்றும் அறிவியல் அமைப்பிடம் இருந்து ஸ்டார் விருதும் பெற்றுள்ளார். அத்துடன் 500 டாலர் தொகையும் பரிசாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மேத்யூஸ் க்ரூக்ஸ் என்ன காரணத்திற்காக இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டார்? இதன் பின்னணியில் யார் உள்ளனர்? என்று அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.