Biden On Trump: சக அமெரிக்கர்கள் எதிரிகள் அல்ல, கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஒன்றாக நிற்க வேண்டிய நண்பர்கள் என அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.


டிரம்ப் மீது தாக்குதல் - அதிபர் பைடன் விளக்கம்:


அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட, துப்பாக்கிச் சூடு சம்பவம் உலக தலைவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த தாக்குதல் தொடர்பாக அத்பர் பைடன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்ல், விரோத அரசியலின் சூட்டை தணிக்க தேசத்திற்கு அழைப்பு விடுத்தார். மேலும், சக அமெரிக்கர்கள் எதிரிகள் அல்ல, கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஒன்றாக நிற்க வேண்டிய நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள்” என பைடன் வலியுறுத்தியுள்ளார்.


ஒன்றுபட்டு இருக்க வேண்டும் - பைடன்:


பைடன் வெளியிட்டுள்ள செய்தியில், "அரசியல் சூட்டை குறைக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி நான் இன்றிரவு உங்களிடம் பேச விரும்புகிறேன். நாம் உடன்படாதபோது, ​​​​நாம் எதிரிகள் அல்ல. நாம் அண்டை வீட்டாளர்களே, நாம் நண்பர்கள், சக ஊழியர்கள், குடிமக்கள் மற்றும் மிக முக்கியமாக, நாம் சக அமெரிக்கர்கள், நாம் ஒன்றாக நிற்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.


இருதரப்பினரின் பொறுப்பு:


தொடர்ந்து, "பென்சில்வேனியாவில் டொனால்ட் டிரம்பின் பேரணியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு, ஒரு படி பின்வாங்கவும், நாம் எங்கே இருக்கிறோம், எப்படி இங்கிருந்து முன்னேறுகிறோம் என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. ஒற்றுமை என்பது எல்லாவற்றிலும் மிகவும் மழுப்பலான குறிக்கோள், ஆனால் அதைவிட முக்கியமானது எதுவுமில்லை. அந்த ஒற்றுமைக்கு இதுவே சரியான நேரம். நிலைமையை எளிதாக்குவதற்கு இரு தரப்பினருக்கும் பொறுப்பு உள்ளது” என  81 வயதான அதிபர் பைடன் பேசியுள்ளார்.


டிரம்ப் வலியுறுத்தும் ஒற்றுமை:


78 வயதான டிரம்ப் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். தாக்குதலுக்குப் பிறகு, அவரும் ஒற்றுமை தொடர்பான செய்தி வெளியிட்டுள்ளார்.  அதில் அமெரிக்கர்கள் "தீமை வெல்ல" அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். மேலும்,  “நினைக்க முடியாததை நடக்க விடாமல் தடுத்தது கடவுள் ஒருவரே” என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும், அமெரிக்கர்கள் ஒற்றுமையாக சேர்ந்து போராட வேண்டும் எனவும், டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.


தேர்தல் களத்தை மாற்றும் சம்பவம்:


நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பைடன் மற்றும் டிரம்ப் பிரதான வேட்பாளர்களாக உள்ளனர். பைடன் வயது மூப்பு காரணமாக சில பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார். நேரடி விவாதத்தின் போது மாற்றி மாற்றி பேசுவது போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டார். இது டிரம்பிற்கு சாதகமாக அமையும் என கூறப்படுகிறது. இந்த சூழலில் அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, பெரும் அனுதாப அலையை டிரம்பிற்கு ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.