நீண்ட இழுத்தடிப்புக்கு பின்  உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.3.65 லட்சம் கோடி) விலைக்கு வாங்கினார். அன்று முதல் தன் பெயர் தினமும் தலைப்புச் செய்தியில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்  ட்விட்டரில் அவர் செய்யும் சம்பவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்நிலையில் ட்விட்டருக்கு புதிய சிஇஓவாக பதவியேற்க உள்ளார் லிண்டா யாகாரினோ.


யார் இந்த லிண்டா யாகாரினோ?


* லிண்டா யாகாரினோ NBC Universal என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். என்பிசி யுனிவர்சல் மீடியா, எல்.எல்.சி. என்பது ஒரு அமெரிக்க பன்னாட்டு வெகுஜன ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு கூட்டு நிறுவனமாகும், இது காம்காஸ்ட் நிறுவனத்திற்கு சொந்தமானது மற்றும் நியூயார்க் நகரத்தின் மிட் டவுன் மன்ஹாட்டனில் உள்ள 30 ராக்ஃபெல்லர் பிளாசாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இதில் அவர் விளம்பரங்களின் பலன்களை ஆராயும் நிமித்தமாக வழக்கறிஞராக இருந்தார். விளம்பரம், விற்பனைப் பிரிவின் தலைவராவார். நிறுவனத்தில் பீகாக் ஸ்ட்ரீமிங் சர்வீஸ் என்ற சேவையை தொடங்க முக்கியமானவராக இருந்தார்.


* யாகார்னோ அதற்கு முன்னதாக 19 ஆண்டுகள் டர்னர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தில் இருந்துள்ளார். விளம்பர விற்பனையை டிஜிட்டல் தளத்திற்கு இழுத்துச் சென்றதில் பெரும் பங்காற்றியிருந்தார்.


* லிண்டா பென் ஸ்டேட் யுனிவர்சிடியில் பயின்றவர். அவர் லிபரல் ஆர்ட்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்ஸ் பயின்றார்.


* மேலும் அவர் கடந்த மாதம் மியாமியில் நடந்த விளம்பரதாரர்கள் மாநாட்டில் எலான் மஸ்கை பேட்டி எடுத்தார். அப்போது அவர் பார்வையாளர்கள் எலான் மஸ்கிற்கு பெருத்த வரவேற்பைக் கொடுக்குமாறு ஊக்குவித்து பேட்டியைத் தொடங்கினார். பேட்டி ,முழுவதுமே எலான் மஸ்கின் பணிக் கலாச்சாரத்தை அவர் வெகுவாகப் பாராட்டினார்.


* யாகார்னிகோ வெளியேறுவது காம்காஸ்ட் நிறுவனத்திற்கு பேரிழப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் NBCUniversal CEO ஜெஃப் ஷெல் கடந்த மாதம் நிறுவனத்தின் பெண் ஊழியருடனான தகாத உறவு புகாரால் வெளியேறினார். அந்தப் புகார் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
 


எலான் மஸ்க் கைக்குப் போன பின்னர் ட்விட்டர்:


ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவர்கள் பணம் செலுத்த வேண்டும்,  நிறுவனங்களுக்கு தங்க நிற டிக், அரசாங்க அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக் மற்றும்  தனிநபர்களுக்கு நீல நிற டிக் என பல யுக்திகளை கையாண்டார். மேலும் நிறுவனத்தை சீர்படுத்த ஆள்குறைப்பு நடவடிக்கைகளிலும் இறங்கினார். ட்விட்டர் தளத்தில் படு ஆக்டிவாக  செயல்படும் எலான் மஸ்க்  அந்த தளத்தில் அதிக  ஃபாலோயர்களை பெற்ற நபர் என்ற பெருமையை கடந்த மாதம் பெற்றார். அவ்வப்போது அவர் ட்விட்டரில் எதாவது ஒரு தலைப்பில் பதிவுகளை வெளியிடுவார். சில நேரங்களில் மற்ற பயனாளர்களின் பதிவுக்கு பதிலளிப்பார். 


விரோதமாக திரும்பிய வாக்கெடுப்பு:


எலான் மஸ்க் எதற்கெடுத்தாலும் ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்துவது வழக்கம். அப்படித்தான் அண்மையில் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா?" என டிவிட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார். மேலும், பெரும்பான்மையானவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு அதற்குத் தான் கட்டுப்படுவதாகவும் உறுதியளித்திருந்தார். இறுதியில் இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் எலான் மஸ்கிற்கு எதிராகத் திரும்பியது. இதில் 57.5 சதவிகிதத்துக்கும் அதிகமான பயனர்கள் எலான் பதவி விலக வேண்டும் என்றும் பதிலளித்திருந்தனர். இதையடுத்து உறுதியளித்ததன் படி எலான், ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலக வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர்.